அப்போது தாவூத்… இப்போது லாரன்ஸ் பிஷ்னோய்? – பீதியில் மும்பை; நடவடிக்கை எடுக்குமா மோடி அரசு?

மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் பிறந்தவர் தாவூத் இப்ராஹிம். ஆரம்பத்தில் மும்பையில் சிறு, சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்தார். பிறகு டி-கம்பெனியை உருவாக்கினார். தனது கூட்டத்தின் மூலம், தங்கம் கடத்துதல், போதை பொருள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் என பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். 1986-ம் ஆண்டில் இருந்து கெடுபிடி அதிகரித்தது. இதையடுத்து துபாய்க்கு தப்பினார். 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்டது, தாவூத் இப்ராஹிம்தான் என மும்பை போலீஸ் நம்பியது. இதனால் அவர்மீதான பிடி மேலும் இறுகியது. இதனால் துபாயில் இருந்து கராச்சிக்கு தப்பி சென்றார். 2003-ம் ஆண்டு தாவூத் இப்ராஹிம் சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவர் மும்பையில் இருந்து வெளியேறியதால் அங்குள்ள மக்கள் நிம்மதியாக இருந்து வந்தனர்.

இந்த நிலையில், தற்போது லாரன்ஸ் பிஷ்னோய் மூலம் மும்பையில் மாஃபியாக்கள் மீதான பீதி மக்களிடத்தில் மீண்டும் ஏற்பட்டுள்ளது.

தாவூத் இப்ராகிம்

லாரன்ஸ் தலைமையிலான கூலிப்படை கும்பலில் 700-க்கும் மேற்பட்டோர் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த கும்பல் கடந்த 12-ம் தேதி முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை சுட்டுக் கொலை செய்தது. இது குறித்து மும்பை போலீஸார், “மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான பாபா சித்திக் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். அலுவலகத்தில் இருந்து இல்லத்திற்கு புறப்பட்டிருக்கிறார். அப்போது மறைந்திருந்த கும்பல் அவரை நோக்கி ஆறுமுறை துப்பாக்கியால் சுட்டுள்ளது. இதில் மூன்று குண்டுகள் அவரைத் தாக்கியது. இதில் சுருண்டு கீழே விழுந்திருக்கிறார். உடனே அவரை மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். அங்கு அவர் இறந்துவிட்டதாக சொல்லப்பட்டது. கொலை செய்தவர்களில் இரண்டு பேரை மக்களே பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஹரியானாவைச் சேர்ந்த குர்மெயில் பல்ஜித் சிங், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் என்பது தெரியவந்தது. இவர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்தவர்கள்” என்றனர்.

இது தொடர்பாக லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளி சுப்பு லோன்கர், “நாங்கள்தான் பாபா சித்திக்கை சுட்டுக் கொலைசெய்தோம். நடிகர் சல்மான் கான்தான் சண்டையைத் தொடங்கினார். சல்மான் கானுக்கு உதவி செய்ய நினைப்பவர்களுக்கு அடுத்த குறி வைக்கப்படும். நாங்கள் இந்த சண்டையை விரும்பவில்லை. எங்களது சகோதரனை கொன்றுவிட்டீர்கள். இன்று பாபா சித்திக் பாராட்டப்படுகிறார். ஆனால் ஒரு நேரத்தில் தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு வைத்திருந்தார். தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு, எங்கள் சகோதரன் அனுஜ் தாபன் கொலை போன்ற காரணத்தால்தான் பாபா சித்திக்கை கொலைசெய்தோம். எங்களுக்கு யாருடனும் பகை கிடையாது. ஆனால் சல்மான் கான் மற்றும் தாவூத் இப்ராகிமிற்கு யார் உதவினாலும் அவர்களை விடமாட்டோம். எங்களது சகோதரர்கள் யாரையாவது கொலை செய்ய முயன்றால் நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம். நாங்கள் முதலில் தாக்கமாட்டோம். அதோடு வாழ்க்கையின் சாராம்சத்தை நான் புரிந்துகொள்கிறேன், செல்வத்தையும் உடலையும் மண்ணாகக் கருதுகிறேன், நட்பின் கடமையை மதித்து சரியானதை மட்டுமே செய்தோம்” என தெரிவித்திருக்கிறார்.

லாரன்ஸ் பிஷ்னோய்

லாரன்ஸ் பிஷ்னோயின் பின்னணி குறித்து பேசும் போலீஸ் உயரதிகாரிகள், “பஞ்சாப்பின் பெரோஸ்பூரைச் சேர்ந்தவர் லாரன்ஸ் பிஷ்னோய். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்திருக்கிறார். கல்லூரி காலங்களில் மாணவர் பேரவை அரசியலில் ஈடுபட்டு வந்தார். பிறகு கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார். கைதாகி சிறைக்கு சென்றவருக்கு அங்குள்ள கைதிகளுடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. விடுதலையான பிறகு ஆயுத கடத்தல், மது கடத்தலில் ஈடுபட்டார். அப்போதுதான் தனக்கென ஒரு கும்பலை உருவாக்கினார். இதையடுத்து 2014-ம் ஆண்டு அவரை பிடிக்க ராஜஸ்தான் போலீஸார் சென்றிருக்கிறார்கள். அப்போது இரு தரப்புக்கும் இடையில் துப்பாக்கி சண்டை நடந்திருக்கிறது. இதில் லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டார். திஹார் சிறையில் இருந்தவர், பிறகு அகமதாபாத் சபர்மதி சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்து கொண்டுதான் அனைத்து குற்றச்செயல்களையும் செய்து வருகிறார்.” என்கின்றனர்.

சல்மான் கானுடன் சித்திக்

பாபா சித்திக் கொலைக்கான காரணம் குறித்து பேசும் விவரப்புள்ளிகள், “பிஷ்னோய் சமூகத்தினர் மான் உள்ளிட்ட விலங்குகளை புனிதமாகக் கருதுபவர்கள். இதனால்தான் மான் வேட்டை புகாரில் சிக்கிய பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்லவும் பிஷ்னோய் கும்பல் முயற்சித்து வருகிறது. அவருக்கு நெருக்கமானவராக அறியப்படுபவர்தான், பாபா சித்திக். எனவேதான் இந்தக் கொலை நடந்திருக்கிறது. இதில் பாலிவுட் பிரபலங்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். பிரபலங்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பாபா சித்திக்தான் தீர்த்து வைப்பார். இவர்தான் ஷாருக் கான், சல்மான் கான் இடையே ஏற்பட்ட மனக்கசப்பைக்கூட தீர்த்து வைத்தார். இதனால் சல்மான் கானுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜெய்ப்பூரில் வலதுசாரித் தலைவர் சுக்தேவ் சிங், பஞ்சாப் பாடகர் சிது மூஸ்வாலா கொலையிலும் இந்த கும்பலுக்கு தொடர்பு இருக்கிறது” என்கின்றனர்.

ஏ.என்.எஸ்.பிரசாத்,

மும்பையில் மீண்டும் அதிகரித்திருக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பா.ஜ.க அரசு நடவடிக்கை எடுக்குமா என்கிற கேள்விக்கு பதிலளித்த அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், “மும்பை ஒருகாலத்தில் ரௌடிகளின் கோட்டையாக இருந்தது. ஆனால் இன்று அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றே தெரியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதெற்கெல்லாம் பா.ஜ.க அரசு எடுத்த நடவடிக்கைகள்தான் காரணம். பிரபல நிழல் உலக தாதாவான தாவுத் இப்ராஹிம் கூட எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவோம் என அஞ்சி நடுங்கிக்கொண்டு இருக்கிறான். ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு உத்தரப்பிரதேசத்தில் நடத்தப்பட்ட என்கவுண்டர்களே சமீபத்திய சான்று. இதனால் அங்கு குற்றவாளிகளே இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆகவே ரௌடிசம், தீவிரவாதத்துக்கு எதிரானவர்கள் நாங்கள். எனவேதான் பா.ஜ.க பக்கம் மக்கள் நிற்கிறார்கள். பாபா சித்திக் கொலை துரதிஷ்டவசமானது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தலைமறைவாக இருப்போரும் விரைவில் பிடிக்கப்படுவார்கள். இந்திய நாட்டு மக்களின் நிம்மதியை கெடுக்கும் வகையில் யார் செயல்பட்டாலும், அவர்களை பிரதமர் மோடி தண்டிக்காமல் விடமாட்டார்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.