புதுடெல்லி: இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று ஐ.நா.வுக்கான இந்திய தூதர் எல்டோஸ் மேத்யூ புன்னூஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஐ,நா. அவையில் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது: பாகிஸ்தான் கூறும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிராகரிக்கப்படக்கூடியவை. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்குப் பதிலாக பாகிஸ்தான் அதன் உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எவ்விதமான தார்மீக உரிமையும் கிடையாது.
பாகிஸ்தான் கூறும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் ஜம்மு-காஷ்மீர், லடாக் தொடர்பானவை. இந்த பகுதிகள் அனைத்தும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதி என்பதை அந்த நாடு உணர்ந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு, காஷ்மீர், லடாக் (பிஓஜேகேஎல்) பகுதிகளில் தற்போது மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருகின்றன. அதனை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
கறைபடிந்த ஜனநாயகம்: இந்தியா துடிப்பான ஜனநாயகத்தை கொண்ட நாடு. ஆனால், பாகிஸ்தான் அதற்கு நேரெதிரான நிலைப்பாட்டை கொண்டது. போலியான தேர்தல்களை நடத்துவது, எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் அடைப்பது, அரசியல் ரீதியில்எழும் உரிமை குரல்களை அடக்கிஒடுக்கும் செயலில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எனவே, கறைபடிந்த அவர்களது ஜனநாயகத்தை பார்த்துப் பழகி உண்மையான ஜனநாயக நடைமுறைகளை போலியானது எனபாகிஸ்தான் கருத தொடங்கிவிட்டது.
அண்டை நாடுகளின் எல்லைகளில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் ஒரு கொள்கையாகவே கடைபிடித்து வருகிறது. அதற்கான ஆட்கள் மற்றும் ஆயுத உதவிகளை அந்த நாடு தொடர்ந்து வழங்கிவருகிறது. இது, மிகவும் கண்டனத்துக்குரியது. இதுபோன்ற நடவடிக்கைகளை அந்த நாடு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றுள்ளதை பாகிஸ்தானால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. போலியான ஜனநாயக முறைகளை கடைபிடிக்கும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இந்தியாவின் உண்மையான ஜனநாயக நடைமுறையை ஏற்றுக்கொள்ள மனமில்லை.
இந்தியா ‘‘பன்முகத்தன்மை, சமத்துவம், ஜனநாயகம்” போன்றநற்பண்புகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. அதேநேரம், பாகிஸ்தான் ‘‘பயங்கரவாதம், குறுகிய மனப்பான்மை, துன்புறுத்தலை’’ அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அண்டை நாடுகளின் விவகாரங்களில் தலையிட முயற்சிப்பதைவிட அதன் உள்நாட்டு பிரச்சினைகளை தீர்ப்பதில் பாகிஸ்தான் கவனம் செலுத்தவேண்டும். இவ்வாறு மேத்யூ புன்னூஸ் தெரிவித்தார்.