வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
பழைய செயற்கைக்கோள் புகைப்படங்களை பார்த்தால் பகலில் நீலமும் பச்சையுமான பூமியையும், இரவில் கருநிறத்தில் ஆங்காங்கே மின்மினிப்பூச்சி போன்று மின்னும் பூமியையும் நாம் காணலாம். ஆனால் இன்றோ இரவு நேர செயற்கைக்கோள் புகைப்படத்தில் பூமி பளபளவென்று மின்னுகிறது.
இரவையும் பகலாக்கும் ஒளிவிளக்குகளால் நாம் பூமியை மட்டுமல்ல விண்ணையும் மின்ன வைத்து விட்டோம் என்று பெருமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இது பார்த்து மகிழ வேண்டிய விஷயம் அல்ல. நாம் அஞ்ச வேண்டிய ஆபத்து.
இன்று நகர்ப்புறங்களில் வாழும் குழந்தைகளுக்கு இரவு வானத்தின் அழகும், அதில் நட்சத்திரங்கள் வரையும் கோலங்களையும் பற்றி எதுவுமே தெரியாது.
ஏனெனில் இங்கு பெரும்பாலான இடங்களில், இரவு நேரத்தில் பஞ்சு பொதி போன்ற வெண் மேகங்கள் தவழ்ந்து செல்லும் நீல நிற வானத்தை தான் காண முடிகிறது.
காற்று, நீர் மற்றும் மண் மாசுபாட்டினைப் பற்றி விடாமல் பேசிக் கொண்டிருக்கும் நாம் சத்தமின்றி அதிகரிக்கும் ஒளி மாசுபாட்டை பற்றி சிறிதும் உணராமல் இருக்கிறோம் என்பதே உண்மை.
ஒளி மாசுபாட்டிற்கான முக்கிய காரணங்கள்
ஒவ்வொரு வருடமும் 6% அளவு ஒளி மாசுபாடு இரவு நேரங்களில் அதிகரித்து வருகிறது. இதற்கு 35 முதல் 50% தெரு விளக்குகளும், இரவு முழுவதும் மின்னும் விளம்பர பதாகைகளுமே காரணமாக அமைகின்றன.
சரியான திட்டமிடல் இன்றி தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும், கடைகளிலும் விளக்குகளை அமைப்பதாலும், இரவு முழுவதும் வீடுகளில் முகப்பு விளக்குகளை எரிய விடுவதாலும், வான வேடிக்கைகளிலிருந்து வரும் வெளிச்சத்தாலும் ஒளி மாசுபாடு பன்மடங்கு அதிகரிக்கிறது.
ஒளி மாசுபாடும் மனிதர்களும்
24 மணி நேரமும் வெளிச்சத்தில் வாழ்வதற்கு தகவமைக்கப்பட்டவன் அல்ல மனிதன். நம் உடலில் உள்ள மரபணுக்களில் பகல் இரவு மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவே வளர்ச்சிதை மாற்றம் உட்பட மனித உடலின் அனைத்து செயல்களையும் முன்னெடுத்து செல்கின்றது.
சூரியன் மறைந்து வெளிச்சம் குறைய தொடங்கியதும் நம் மூளையிலுள்ள பீனியல் சுரப்பியிலிருந்து, மெலடோனின் என்ற பொருள் உற்பத்தியாகிறது. மெலடோனின் நம் உடலுக்கு சோர்வை கொடுத்து தூக்கத்தை உண்டு பண்ணுகிறது. ஒளி மாசுபாட்டின் காரணமாக மனிதர்களிடையே இந்த மெலடோனின் உற்பத்தி குறைந்துள்ளது.
இதன் காரணமாகவே இன்று தூக்கமின்மை பெருகி, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, மன அழுத்தம் பலரிடம் உருவாகி உள்ளதாகவும், ஹார்மோன் சம்பந்தமான புற்று நோய்களான மார்பு மற்றும் பிராஸ்டேட் புற்றுநோயின் அளவும் அதிகரித்துள்ளதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
ஒளி மாசுபாடும் விலங்குகளும்
உலகில் 30% முதுகெலும்பிகளும், 60% முதுகெலும்பற்ற உயிரினங்களும் இரவு நேர விலங்குகளாகும். இவை ஒளி மாசுபாட்டினால் பெருமளவு பாதிப்புக்குள்ளாகி விட்டன.
இரவு நேர பாலூட்டிகளான வவ்வால்கள் வெளிச்சத்தை விரும்புவதில்லை. ஆனால் அவற்றின் முக்கிய உணவான பூச்சிகள் அனைத்தும் இரவு நேர செயற்கை வெளிச்சத்தை நோக்கியே கவர்ந்திழுக்கப்படுகின்றன. எனவே பல இடங்களில் வௌவால்கள் உணவின்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
கங்காருவை போன்ற பையுள்ள பாலூட்டியான வல்லபிகளும் இதிலிருந்து தப்பவில்லை. அதிக ஒளியுள்ள இடத்தில் வாழும் வல்லபிகள் குறை பிரசவத்தில் குட்டிகளை ஈனுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஒளி மாசுபாடும் பறவைகளும்
பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் வலசை போகும் பறவைகள் நிலவொளியையும், நட்சத்திரங்களின் வெளிச்சத்தைமே அடையாளமாக வைத்து செல்கின்றன. செயற்கை ஒளி இப்பறவைகளின் மரபணுவில், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டுள்ள பகலிரவு மாற்ற தகவல்களில் குழப்பத்தை ஏற்படுத்தி, அவற்றின் வலசை போகும் தன்மையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது.
ஒளி மாசுபாடும் இருவாழ்விகளும்
கடற்கரை மணலில் புதிதாக பொறிக்கும் ஆமைக்குஞ்சுகள் நிலா வெளிச்சத்தை பார்த்து தான் கடலை நோக்கி நகர்கின்றன. ஆனால் இன்றோ கடற்கரையை அழகூட்டுவதற்காக நாம் வைத்துள்ள செயற்கை ஒளி விளக்குகளை, நிலவொளி என்றெண்ணி கடலுக்கு பதிலாக கடற்கரையை நோக்கி ஊர்ந்து சென்று, சாலைகளில் செல்லும் வாகனங்களால் ஆமைக்குஞ்சுகள் இறக்கும் பரிதாபமும் பல இடங்களில் நடக்கிறது.
முன்பெல்லாம் மழைக்கால இரவு நேரங்களில், தவளைகளின் கச்சேரி மிகப் பலமாக கேட்கும். ஆண் தவளைகள், பெண் தவளைகளை கவர ஒலி எழுப்புவதற்கு இரவு நேர இருட்டே தூண்டுதல். இரவு நேரங்களில் சிறுவயதில் கேட்ட தவளைகளின் குரல் இப்பொழுது கேட்கவில்லையே என்று கூறும் நாம் தவளைகள் எண்ணிக்கை குறைந்ததற்கு நீர் மற்றும் மண் மாசுபாடு மட்டுமே காரணமென்று கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருக்கிறோம்.
ஒளி மாசுபாடும் பூச்சிகளும்
உலக அளவில் பூச்சிகளின் எண்ணிக்கை குறையவும் ஒளி மாசுபாடு காரணமாக அமைந்துள்ளது. பூச்சியினங்களில் 49.4% இரவு நேரத்தில் வாழ்பவை. இவற்றில் 77.8% வண்ணத்துப்பூச்சியினங்களும், 60% வண்டினங்களும் அடங்கும். ஒளி மாசுபாடு இவை அனைத்தின் வாழ்விலும் ஏற்படுத்தியுள்ள தாக்கம் மிக அதிகம்.
இனச்சேர்க்கையின் போது வெளிச்சத்தைக் காட்டியே மின்மினி பூச்சிகள் தன் இணையைக் கவர்கின்றன. பிரேசிலின் அட்லாண்டிக் காடுகளில் உள்ள மின்மினி பூச்சிகள், காடழிப்பு மற்றும் நகரமயமாக்குதலை விட ஒளி மாசுபாட்டினாலே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பொழுதெல்லாம் இரவு நேரங்களில் மின்மினி பூச்சியை காண முடிவதில்லை என்று கூறும் நாம், இதற்கு செயற்கை ஒளி காரணமாக இருக்குமென உணர தயாராகவே இல்லை.
ஒளி மாசுபாடும் கடல் வாழ் உயிரினங்களும்
இரவு நேர செயற்கை ஒளியினால் பவளப்பாறைகளின் செல் வளர்ச்சி, புரதம் மற்றும் கொழுப்பு உருவாக்கம் போன்றவைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆக்சிஜனேற்ற சேதம் அதிகரித்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கழிமுக கரையோரங்களில் மின்னும் ஒளி விளக்குகளால் கடலிலிருந்து ஆற்றுக்கு முட்டையிட செல்லும் சால்மன் போன்ற மீன்களும் பாதிக்கப்படுகின்றன.
வாரக்கணக்கில் சூரியன் உதிக்காத துருவப்பிரதேசங்களை ஆராய்வதற்காக முகாமிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் ஏற்படுத்தும் செயற்கை ஒளியினால், அங்குள்ள உயிரினங்களின் வாழ்வியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒளி மாசுபாடும் தாவரங்களும்
தாவரங்களில் நிறமி தோன்றுதல், இலை உதிர்தல், மொட்டுக்கள் உருவாதல், விதை முளைத்தல் ஆகியவை சூரிய வெளிச்சத்தை பயன்படுத்தியே நடக்கின்றன. செயற்கை ஒளிக்கு அருகாமையில் நிற்கும் மரங்கள் மிகத் தாமதமாகவே இலையை உதிர்க்கின்றன. மேலும் இம்மரங்களில் இலைகளின் அளவும் பெரிதாக உள்ளது. பெரிய இலைகள் அதிகளவு தூசியையும் குளிரையும் தாங்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றன.
சத்தமின்றி நடக்கும் யுத்தம்
பல கோடி ஆண்டுகளாக அதாவது, பூமியில் உருவான முதல் உயிரினத்திலிருந்து, பகலிரவு மாற்றமே உயிர்களின் வளர்ச்சிதை மாற்றத்தையும் பரிணாமத்தையும் காத்து வந்துள்ளது. மனிதன் சத்தமின்றி அதனை மாற்றி கொண்டு வருகிறான். ஒளி மாசுபாடு உலகிலுள்ள உயிரினங்களின் சர்க்காடியன் இசைவை (Circadian rhythm) மாற்றிக் கொண்டிருக்கின்றது.
80% உலக மக்கள் ஒளி மாசுபாட்டுக்குள் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஒளி மாசுபாடு அதிகமுள்ள இடங்களில் வாழும் பெரும்பாலான மக்கள் இரவு நேரங்களில் பளிச்சிடும் வெளிச்சத்தினால் தூக்கம் கெட்டுப் போவதை தவிர்ப்பதற்காக கண்களில் அணிவதற்கு கண்மூடியை பயன்படுத்துகின்றனர்.
கண் மூடியை பயன்படுத்தி நிம்மதியாக தூங்கி விடலாம். ஆனால் இரவு நேர வளர்சிதை மாற்றம் நடைபெறுவதற்காக, நம் உடம்பில் தோல் முதற்கொண்டு அனைத்து பாகங்களுக்கும் காத்துக்கொண்டிருக்குமே அவற்றின் நிலை என்ன..? அத்தோடு விலங்குகளும், பறவைகளும் தூங்குவதற்கு என்ன கண்மூடியை பயன்படுத்தும்..?
இரவு நேரத்தில் நட்சத்திரங்களை காண இயலாத காரணத்தினால், முதலில் ஒளி மாசமாட்டின் வீரியத்தை உணர்ந்து கொண்டவர்கள் வானியலாளர்கள் மட்டுமே..! உயிரியல் விஞ்ஞானிகளும், சூழலியலாளர்களும் இப்பொழுதுதான் சிறிதளவு விழித்துக் கொண்டு இதைப்பற்றி ஆராய்ச்சியை தொடங்கவே செய்துள்ளனர்.
இரவு வான் சரணாலயங்கள்
வானியல் ஆராய்ச்சிக்காக ஒளி மாசுபாடற்ற இரவு வான் சரணாலயங்களையும், பூங்காக்களையும் பல நாடுகள் அமைத்துள்ளன. இதுவரை உலகில் 199 இரவு வான் சரணாலயங்கள் (Dark Sky Reserve) அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் ஒரு இரவு வான் சரணாலயம் உள்ளது தெரியுமா..? லடாக்கின் ஹான்லேயில் உள்ள இந்திய வானியல் தொலைநோக்கு நிலையம் தான் அது.
2022ம் ஆண்டு இந்தியாவின் முதல் இரவு வான் சரணாலயமாக இதை அறிவித்தனர். வருங்காலத்தில் நம் குழந்தைகள் வெறும் கண்ணில் நட்சத்திரங்களை பார்க்க வேண்டுமென்று கூறினால், இதுபோன்ற இரவு வான் சரணாலயங்களுக்கு சென்று தான் காட்ட வேண்டியிருக்கும். இப்பொழுதே சென்னை போன்ற பெரு நகரங்களின் நிலை இதுதான்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல
வெளிச்சமின்றி வளர்ச்சி இல்லை என்பது உண்மைதான். ஆனால் சூரியன் அஸ்தமித்ததும் தம் வாழ்வை துவங்கும் உயிர்கள் ஏராளம். நாம் இரவை ஒளிர வைப்பதாக கூறிக் கொண்டு, அவற்றின் வாழ்வை அழித்துக் கொண்டிருக்கிறோம். ஒளி மாசுபாட்டினை தவிர்ப்பதற்கு நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். மற்ற மாசுபாடுகளை போல் ஒளி மாசுபாட்டினை குறைப்பது அவ்வளவு கடினமான வேலை ஒன்றும் அல்ல.
அளவுக்கு அதிகமான வெளிச்சத்தை கொடுக்கும் செயற்கை விளக்குகளை, ஆமைகள் முட்டையிடும் இடங்கள் மற்றும் வலசை போகும் பறவைகள் உள்ள இடங்களிலாவது குறைத்துக் கொள்ள முயற்சிக்கலாம்.
முன்பெல்லாம் வீட்டிற்கு வெளியே அமைக்கப்படும் முகப்பு விளக்குகளின் மேல்புறம் மழைநீரிலிருந்து காப்பதற்காக, தொப்பி போன்ற டோம் (Dome) அமைக்கப்பட்டிருக்கும். அனைத்து தெருவிளக்குகளிலும் அதனை பயன்படுத்தலாம். இதன் மூலம் தெரு விளக்குகளின் ஒளி வானில் எதிரொலிக்காமல் தடுக்கலாம்.
தேவை இருக்கும் போது மட்டும் விளக்குகளை எரிய விடுவது, தேவையான அளவு மட்டும் வெளிச்சத்தை பயன்படுத்துவது போன்ற சிறிய முன்னெடுப்புகளே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். குறைந்த பட்சம் நம் வீடுகளிலுள்ள வெளி விளக்குகளையாவது இரவு நேரங்களில் அனைத்து வைப்போம். இரவை இரவாக உணர்வோம்..! மாற்றங்களை நம்மிடமிருந்தே முன்னெடுப்போம்..!
-முனைவர். வானதி பைசல்,
விலங்கியலாளர்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.