பெங்களூரு: “பட்டியலின உள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் நிலைப்பாட்டையே திராவிட, இடதுசாரி கட்சிகள் பிரதிபலிக்கின்றன” என பேராசிரியர் லட்சுமணன் தெரிவித்தார்.
பெங்களூருவில் பண்டிதர் பதிப்பகம், வணங்காமுடி இயக்கம், அயோத்திதாசர் அம்பேத்கர் வாசகர் வட்டம் ஆகிய அமைப்பினர் இணைந்து பட்டியலின உள் ஒதுக்கீட்டுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை மாலை கருத்தரங்கம் நடத்தினர். இதில் பாவலர் மகிமை தாஸ் எழுச்சி பாடல்களை பாட, கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் சி.ராசன், முன்னாள் அதிமுக கர்நாடக மாநில செயலாளர் எஸ்.டி.குமார், இந்திய குடியரசு கட்சியின் பொதுச்செயலாளர் மங்காபிள்ளை உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.
இந்த கருத்தரங்கில் பேராசிரியர் லட்சுமணன் பேசுகையில், “முன்னாள் முதல்வர் கருணாநிதி வாக்கு வங்கி அரசியலை மனதில் வைத்து தமிழகத்தில் அருந்ததியர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கினார். அத்துடன் எஞ்சியுள்ள 15 சதவீதத்திலும் முன்னுரிமை, 200 புள்ளி ரோஸ்டர் முறையையும் அறிவித்தார். இதனால் பட்டியலினத்தில் பெரும்பான்மையாக இருக்கும் ஆதிதிராவிடர் சமூகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டில் கல்வி, வேலை வாய்ப்பு அனைத்து துறைகளிலும் ஆதிதிராவிடரும், தேவேந்திரரும் வீழ்த்தப்பட்டுள்ளனர். இந்த வலியை உணராமல் தமிழகத்தில் உள்ள திராவிட கட்சிகளும், இடதுசாரி கட்சிகளும், தேசிய கட்சிகளும் உள் ஒதுக்கீட்டை ஆதரிக்கின்றன. எல்லா தளங்களிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பை எதிர்க்கும் பெரியாரியர்களும், மார்க்ஸியர்களும் இந்த விஷயத்தில் அந்த அமைப்பின் நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றனர். பட்டியலின பிரிவை வரையறுக்கும் அதிகாரமோ, அதனை பிரிக்கும் அதிகாரமோ நீதிமன்றத்துக்கு இல்லை.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலே குடியரசுத் தலைவர் அதனை மாற்றியமைக்க முடியும். ஆனால் அண்மையில் உச்சநீதிமன்றம் பட்டியலினத்தில் உள் ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கி இருக்கிறது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே மத்திய அரசு நாடாளுமன்றத்தை கூட்டி, அதனை ரத்து செய்யும் வகையில் அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்” என்றார்.
இதைத்தொடர்ந்து “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி பட்டியலின மக்களின் இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்த வேண்டும். தமிழக அரசு கொண்டுவந்த உள் ஒதுக்கீட்டில் எஸ்சி அருந்ததியர் அடைந்த பயன் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” உள்ளிட்ட 5 தீர்மானங்கள் அந்த கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்டன.