புதுடெல்லி: டெல்லியில் உள்ள கனடா தூதரக பொறுப்பு அதிகாரி ஸ்டூவர்ட் வீலருக்கு மத்திய வெளியுறவு அமைச்சக செயலா ளர் (கிழக்கு) நேற்று மாலை சம்மன் அனுப்பினார். இதன் அடிப்படையில் ஆஜரான வீலரிடம் கனடா அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப் பட்டது.
பின்னர் இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கனடாவில் உள்ளஇந்திய தூதர் மற்றும் பிற தூதரக அதிகாரிகள் மீது ஆதாரமின்றி குற்றம் சாட்டி இருப்பதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்நாட்டு தூதரக பொறுப்பாளரிடம் தெரிவிக்கப்பட்டது.
தீவிரவாதம் மற்றும் வன்முறை சூழலில், ட்ரூடோ அரசின் நடவடிக்கைகள் இந்திய அதிகாரிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் தற்போதைய கனடாஅரசின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அங்குள்ள இந்திய தூதர் மற்றும் பிற அதிகாரிகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம் எனஅவரிடம் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி நாடுவேண்டும் எனக் கோரி காலிஸ்தான்உள்ளிட்ட சில பிரிவினைவாத இயக்கங்கள் வெளிநாடுகளில் செயல்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கனடா நாட்டில்வசித்து வந்த பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கடந்தஆண்டு ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின்ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். இதைஇந்தியா மறுத்தது. இந்நிலையில், மத்தியவெளியுறவு அமைச்சகம் நேற்றுவெளியிட்ட மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கனடா அரசிடமிருந்து ஒரு தகவல் வந்துள்ளது. அதில் ஒரு வழக்கு விசாரணையில் இந்திய தூதர் மற்றும் இதர தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. இந்திய அரசு இந்த அபத்தமான குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிக்கிறது. ட்ரூடோ தலைமையிலான அரசு, வாக்கு வங்கி அரசியலை கருத்தில் கொண்டு இதுபோன்ற குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது.
இந்தியாவுடன் கனடா பிரதமர் ட்ரூடோ நீண்ட காலமாகவே விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறார் என்பதற்கு ஆதாரம் உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்வதற்காகவே அவர் இந்தியா வந்திருந்தார். மேலும் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பிரிவினைவாத மற்றும் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அமைச்சர்களாக நியமித்தார். இதுதவிர, கடந்த 2020-ம் ஆண்டுஇந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் (விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு) தலையிட்டார். இதுவே அவரதுஇந்தியாவுக்கு எதிரான மனநிலையை பிரதிபலித்தது.
இந்தியாவுக்கு எதிராக பிரிவினைவாத செயலை வெளிப்படையாக ஆதரிக்கும் ஒரு அரசியல் கட்சியை ட்ரூடோ அரசுநம்பி இருக்கிறது. இந்நிலையில், உள்நாட்டு அரசியலில் வெளிநாட்டு தலையீடுஇருப்பதை ட்ரூடோ கண்டுகொள்வதில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.இதையடுத்து, வெளிநாட்டு தலையீடு தொடர்பான கமிஷன் முன்பு ட்ரூடோ ஆஜராகி விளக்கமளிக்க இருக்கிறார். இந்நிலையில் இதை திசை திருப்புவதற்காகவே அவர் இந்தியா மீது குற்றம் சுமத்துகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.