புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து உமர் அப்துல்லா தலைமையில் புதிய அரசு நாளை அமைய உள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு நீக்கியது. இதையடுத்து 2019 அக்.31 முதல் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.
இந்நிலையில், காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேசிய மாநாடுகட்சி – காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெற்றது. இதையடுத்து தேசியமாநாடு கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்சி அமைக்க உரிமை கோரி துணைநிலை ஆளுநரிடம் உமர் அப்துல்லா கடிதம் கொடுத்துள்ளார். அதன்படி,நாளை (16-ம் தேதி) காஷ்மீர் முதல்வராக அவர் பதவியேற்கிறார்.
இதையடுத்து, காஷ்மீரில் புதியஅரசு அமைவதற்கு ஏதுவாக, அங்கு அமலில் இருந்த குடியரசுத்தலைவர் ஆட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறைஅரசிதழில் அறிவிப்பு வெளியிட்டு அதை உறுதிப்படுத்தியது. அந்த அரசாணையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கையெழுத்திட்டுள்ளார்.