கேஎல் ராகுல் வேண்டாம்… ஏன் இந்திய அணியில் சர்ஃபராஸ் கான் விளையாட வேண்டும் – 3 முக்கிய காரணங்கள்

India vs New Zealand Test Series Updates: இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நாளை (அக். 16) தொடங்குகிறது. இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. பெங்களூருவை தொடர்ந்து புனே மற்றும் மும்பை மாநகரில் நடைபெற உள்ளன. 

இந்திய அணி இந்த மூன்று போட்டியையும் வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற துடிக்கிறது. கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் நவம்பர் – டிசம்பர் – ஜனவரி மாதங்களில் நடைபெற இருக்கும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரை எதிர்நோக்கி காத்திருந்தாலும் உள்நாட்டில் இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் வெல்ல கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

IND vs NZ: இந்திய பிளேயிங் லெவன்?

பெங்களூருவில் போட்டி நடைபெறுகிறது என்பதால் ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு பதில் குல்தீப் யாதவ் அல்லது அக்சர் பட்டேல் ஆகிய சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். பும்ரா நிச்சயம் அணியில் இடம்பிடிப்பார். சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோரில் ஒருவருக்குதான் நாளைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கும். சிராஜ் அனுபவ வீரர் என்றாலும் ஆகாஷ் தீப் புது பந்தில் சிறப்பாக பந்துவீசி வருவதால் அவரை ஆஸ்திரேலியா தொடருக்கு தயார்படுத்தும் விதமாக ஆகாஷ் தீப்புக்கு ரோஹித் சர்மா வாய்ப்பளிப்பார் என எதிர்பார்க்கலாம். 

அதேபோன்றுதான் கேஎல் ராகுலுக்கு (KL Rahul) பதில் நாளைய போட்டியில் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். சர்ஃபராஸ் கானுக்கு (Sarfaraz Khan) ஏன் வாய்ப்பு வழங்கப்படும் என்பதற்கான மூன்று முக்கிய காரணங்களை இங்கு காணலாம். 

சர்ஃபராஸ் கான்: மூன்று முக்கிய காரணங்கள்

சர்ஃபராஸ் கானை சேர்ப்பதன் மூலம் இன்னும் மூன்று – நான்கு ஆண்டுகளுக்கு இந்திய அணியின் மிடில் ஆர்டரில் அதிரடியாக ஒரு பேட்டர் நிச்சயம் இடம்பெறுவார் என்பது நம்பிக்கை அளிக்கும் முதல் காரணம் ஆகும். இதனால், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பலம் பெறுவது மட்டுமின்றி, நீண்டகால நோக்கிலும் நன்மையாகும். 

அதுமட்டுமின்றி சர்ஃபராஸ் கான் சுழற்பந்துவீச்சை திறம்பட சமாளிக்கக் கூடியவர். ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிரடியாக ரன்களை குவிப்பதில் சர்ஃபராஸ் கான் வித்தைக்காரர். எனவே, நியூசிலாந்து அணிக்கு எதிரான சுழற்பந்துவீச்சை தாக்குவதற்கு சர்ஃபராஸ் கான் முக்கிய நபராக இருப்பார். ஒருவேளை சுப்மான் கில் தொடர்ந்து சொதப்புகிறார் என்றால் கேஎல் ராகுல் ஆஸ்திரேலியாவில் மூன்றாவது வீரராக கூட இறக்கலாம், சர்ஃபராஸ் 5, 6வது வீரராக உள்ளே வருவார். சர்ஃபராஸ் கானின் வருகையால் இந்த நெகிழ்வுத்தன்மை இந்திய அணிக்கு கிடைக்கும், இது இரண்டாவது காரணம். 

மூன்றாவது காரணம் என்னவென்றால், உள்நாட்டு தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் இன்னும் பல வீரர்களுக்கு நம்பிக்கையை ஊட்டும் வகையாக இருக்கும். சர்ஃபராஸ் கானை தொடர்ந்து பலரும் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புவார்கள். ஐபிஎல் மோகத்தால் டெஸ்ட் போட்டிக்கான மோகம் குறைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் இருந்து சர்ஃபராஸ் கானின் வருகை பல வீரர்களிடம் டெஸ்ட் போட்டி மீதான ஈர்ப்பை உண்டாக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.