ஐபிஎல் 2024ல் சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் டுவைன் பிராவோவை தங்கள் அணியின் மெண்டராக நியமித்துள்ளது. கடந்த ஆண்டு வரை கவுதம் கம்பீர் கொல்கத்தா அணியின் மெண்டராக இருந்தார், தற்போது இந்திய அணிக்கு பயிற்சியாளராக மாறி உள்ளார். கடந்த மாதம் செப்டம்பர் 26ம் தேதி பிராவோ அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக பிராவோ அறிவித்தார். அதனை தொடர்ந்து கொல்கத்தா அணி பிராவோவை மெண்டராக நியமித்துள்ளது. ஐபிஎல் 2022ம் ஆண்டு வரை ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த பிராவோ அதன் பிறகு 2 சீசன்களாக பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்து வந்தார்.
இந்த ஆண்டு நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் 2024ல் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக பிராவோ விளையாடிக்கொண்டிருந்தார், ஆனால் காயம் காரணமாக பல போட்டிகளில் விளையாடவில்லை. பிராவோ கொல்கத்தா அணியில் இணைந்தது குறித்து அந்த அணியின் CEO வெங்கி மைசூர் கூறுகையில், “DJ பிராவோ எங்கள் அணியில் இணைந்ததில் மகிழ்ச்சி. அவர் எந்த அணிக்காக விளையாடினாலும் அந்த அணியை வெற்றி பெற செய்வார். இது கொல்கத்தா அணிக்கு பெரிதும் உதவும். அவரது அனுபவம் இளம் வீரர்களுக்கு உத்வேகமாக இருக்கும்” என்று தெரிவித்தார். பிராவோ வெளியேறியதால் சென்னை அணி புதிய பந்துவீச்சு பயிற்சியாளரை தேடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 3 பயிற்சியாளர்களை சென்னை அணி டார்கெட் செய்துள்ளது. அவர்கள் யார் என்று பார்ப்போம்.
பாரத் அருண்
முன்னாள் இந்திய பந்துவீச்சாளரும், தற்போதைய கொல்கத்தா அணியின் பந்துவீச்சு பயிற்சியாளருமான பாரத் அருணை சிஎஸ்கே தேர்வு செய்யலாம். அருண் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக 2014 முதல் 2021 டி20 உலகக் கோப்பை முடியும் வரை பணியாற்றினார். மேலும் ஐபிஎல் 2022 சீசனுக்கு முன்னதாக கொல்கத்தா அணியில் இணைந்தார். ஐபிஎல் 2024ல் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றதில் முக்கியமான ஒருவராக இருந்தார்.
அனில் கும்ப்ளே
சென்னை சூப்பர் கிங்ஸ் டார்கெட் செய்யும் அடுத்த வீரர் அனில் கும்ப்ளே. இந்தியாவின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான அனில் கும்ப்ளே 2016 முதல் 2017 வரை இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார். 2017ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியின் இறுதி போட்டி வரை பயிற்சியாளராக இருந்தார். இதற்கு முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூ அணியின் தலைமை வழிகாட்டியாகவும் பணியாற்றி உள்ளார் கும்ப்ளே. 2020 முதல் 2022 வரை பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். பிராவோ வெளியேறியதை அடுத்து கும்ப்ளே சிறந்த தேர்வாக இருப்பார்.
ஆல்பி மோர்கல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஆல்பி மோர்கல் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படலாம். இவர் 2008 முதல் 2013 வரை சென்னை அணிக்காக விளையாடினார். தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மோர்கல் 2019ம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். மோர்கல் நமீபியா கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளராக 2019 முதல் 2021 வரை பணியாற்றினார். மேலும் பங்களாதேஷ் அணியின் பவர்-ஹிட்டிங் பயிற்சியாளராக பணியாற்றினார். 2023ல் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக மோர்கல் இருந்தார். சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கின் கீழ் ஏற்கனவே மோர்கல் விளையாடி உள்ளதால் சிஎஸ்கே அணியில் இணைய அதிக வாய்ப்புள்ளது.