ஜார்க்கண்ட், மராட்டிய மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் தேதிகள் இன்று அறிவிப்பு

புதுடெல்லி,

மராட்டிய சட்டமன்றத்தின் பதவிக்காலம் வருகிற நவம்பர் 26-ந்தேதியும், ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் ஜனவரி 5-ந்தேதியும் முடிவடைய உள்ளது. இந்த 2 மாநிலங்களிலும் விரைவில் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

மொத்தம் 288 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மராட்டிய மாநிலத்தில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தல், மகாவிகாஸ் அகாடி கூட்டணி மற்றும் மகாயுதி கூட்டணிக்கு இடையிலான இருமுனைப் போட்டியாக அமைய உள்ளது. இதில் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ், சிவசேனா(உத்தவ் பாலசாகேப் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார் அணி) ஆகியவை அங்கம் வகிக்கின்றன.

அதே போல், ஆளும் மகாயுதி கூட்டணியில் பா.ஜ.க., சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே அணி) மற்றும் தேசியவாத காங்கிரஸ்(அஜித் பவார் அணி) ஆகிய கட்சிகள் உள்ளன. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 48 மக்களவை தொகுதிகளில் மகாயுதி கூட்டணி 17 இடங்களில் மட்டுமே வென்றது. அதே சமயம் மகாவிகாஸ் அகாடி கூட்டணி 30 இடங்களை கைப்பற்றியது.

இதையடுத்து, மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில், வரும் டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மற்றும் மராட்டிய மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளது. டெல்லி விக்யான் பவனில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.