தாம்பரம்: தாம்பரம் அருகே மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கியதில் நான்கு மாடுகள் உயிரிழந்துள்ளன. தாம்பரத்தை அடுத்த மதுரபாக்கம் ஊராட்சி மூலசேரி கிராமம், அம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் ராணி, காளிதாஸ். இவர்கள் இருவரும் தனித்தனியாக மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தாம்பரம் பகுதியில் நேற்று (திங்கள்கிழமை) இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் அப்பகுதியில் உள்ள மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்ததில் ராணி மற்றும் காளிதாஸ் ஆகியோரின் 4 மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்து மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாம்பாக்கம் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக மின் இணைப்புகளை துண்டித்தனர். மேலும், மாடுகளின் உரிமையாளர்களுக்கு ஆறுதல் தெரிவித்த அதிகாரிகள், வருவாய்த் துறையினருக்கு இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்து அரசு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக மாடுகளின் உரிமையாளர்களுக்கு உறுதியளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “இந்தப் பகுதியில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டவை. எனவே அவை அனைத்தும் மிகவும் பழையது என்பதால் பெரும்பாலான மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் பழுதான நிலையில் உள்ளது. இதனால் சிறிய அளவில் காற்று அடித்தாலும், மழை பெய்தாலும் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
எனவே இப்பகுதியில் உள்ள பழைய மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளை அமைத்து இதுபோன்ற விபத்துக்கள் இனியும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர். மேலும், மாடுகள் பலியான இடத்தில் இரவில் மட்டுமே மாடுகள் நிற்கும். பகல் நேரங்களில் மேய்ச்சலுக்குச் சென்று விடும். பகல் நேரங்களில் மின்கம்பி அறுந்து விழுந்திருந்தால் மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கும். இரவு நேரம் என்பதால் மாடுகள் இறந்துள்ளன. எனவே, இந்த விஷயத்தில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.