புதுடெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் பாபா சித்திக்கீ, கடந்த சனிக்கிழமை இரவு மும்பைபாந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேர் உட்பட 3 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். ஷிவ்குமார் கவுதம் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த கொலைக்கு பொறுப்பேற்பதாக பிரபல மும்பை தாதா லாரன்ஸ் பிஷ்னோய் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் மும்பை நிழல் உலக தாதாவாக தாவூத் இப்ராகிம் செயல்பட்டு வந்தார். அவர் பாணியை லாரன்ஸ் பிஷ்னோயும் தொடர்வது குறித்து பல தகவல்கள் வெளியாகி உள்ளன. லாரன்ஸ் கும்பலில் தற்போது சர்வதேச அளவில் கூலிப்படையாக செயல்படும் சுமார் 700 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அவர்கள் துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சியும் பெற்றுள்ளனர். இவர்கள், பாகிஸ்தான் உள்ளிட்ட 11 நாடுகளில் செயல்படுவதும் காலிஸ்தான் இயக்க தீவிரவாதி ஹர்வீந்தர் சிங் ரிண்டா, பாகிஸ்தானில் தனது சமூக விரோத நடவடிக்கைகளுக்கு லாரன்ஸின் ஆட்களை பயன்படுத்தி வருவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பஞ்சாபின் பெரோஸ்பூரை சேர்ந்தவர் லாரன்ஸ் பிஷ்னோய் (30). ஹரியானா காவலரின் மகனான லாரன்ஸ், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர். கல்லூரி காலங்களில் மாணவர் பேரவை அரசியலில் தீவிரம் காட்டினார். அப்போதுதான் கோல்டி பிரார் எனும் சத்தீந்தர் சிங் நண்பரானார். இருவர் மீதும் கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி போன்ற 7 வழக்குகள் 2012 வரை பதிவாகின. இதில் கைதான பிஷ்னோய் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் சக கைதிகளின் நட்பை பெற்றவர், விடுதலையாகி ஆயுத கடத்தலில் இறங்கியுள்ளார். அப்போது, தன்னுடன் மோதிய முக்ஸ்தர் என்பவரை சுட்டு கொலை செய்தார் பிஷ்னோய். பிறகு மது கடத்தலிலும் இறங்கியவர், தன் தலைமையில் ஒரு கும்பலை உருவாக்கினார். கடந்த 2014-ல் ராஜஸ்தான் போலீஸாருடனான என்கவுன்ட்டரில் மீண்டும் கைதான லாரன்ஸ் பிஷ்னோய் மீது சிறையில் முக்கிய சாட்சியை கொலை செய்த வழக்கும் பதிவாகி உள்ளது.
பிஷ்னோய் சமூகத்தினர் மான் உள்ளிட்ட விலங்குகளை புனிதமாகக் கருதுபவர்கள். இதனால், மான் வேட்டை புகாரில் சிக்கிய பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்லவும் பிஷ்னோய் தன் நண்பர் சம்பத் நெஹ்ரா மூலமாக முயற்சித்துள்ளார்.
லாரன்ஸின் சர்வதேச தொடர்புகள் காரணமாக அவரது அனைத்து வழக்குகளும் தேசியப் புலனாய்வு நிறுவனத்திடம் (என்ஐஏ) ஒப்படைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு மே 29-ல் பஞ்சாபில் பிரபல பாடகர் சித்து முசேவாலா சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த கொலை நடந்த அடுத்த சில மணி நேரங்களில், ‘நண்பர் பிஷ்னோய் கும்பலின் உதவியால் சித்துவை சுட்டுக் கொன்றேன்’ என்று கோல்டி பிரார் முகநூலில் பதிவிட்டார். இந்த கோல்டி பிரார் கனடா போலீஸாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாகவும் அறிவிக் கப்பட்டுள்ளார். பிஷ்னோயின் நெருங்கிய நண்பரான கோல்டி பிரார், தற்போது லண்டனில் இருந்தபடி செயல்படுகிறார்.
பிஷ்னோய் கும்பலின் முக்கிய உறுப்பினர் நரேஷ் ஷெட்டி டெல்லி போலீஸாரிடம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் சிக்கினார். இவரிடம் நடத்திய விசாரணையில், ஆட்கள் தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் மூலம், பிஷ்னோய் கும்பலுக்கு அடியாட்கள் சேர்க்கப்படுவதாகக் கூறியுள்ளார். அவர்கள் நாட்டின் பல பகுதிகளில் செயல்படுவதாகவும் ஷெட்டி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக லாரன்ஸ் கும்பலுக்கு எதிராக நீதிமன்றத்தில் என்ஐஏ குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக, திஹாரில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்டில் குஜராத்தின் அகமதாபாத்திலுள்ள சபர்மதி சிறைக்கு லாரன்ஸ் மாற்றப்பட்டார். இவரை காவலில் எடுத்து விசாரிக்க மும்பை போலீஸார் முயற்சித்து வருகின்றனர்.