திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கொட்டும் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று (அக்.14) இரவு முதல் மழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை, சராசரியாக 4 செ.மீ. மழை பெய்துள்ளது. இதில் கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரியில் கன மழையாகவும், ஜமீன் கொரட்டூரில் லேசான மழையாகவும், தாமரைப்பாக்கம், பூண்டி, திருவள்ளூர், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையாகவும் பெய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை கொட்டி வருவதாலும், காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்து வருவதாலும் சென்னைக் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளுக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி புழல் ஏரிக்கு விநாடிக்கு 257 கன அடியும், பூண்டி ஏரிக்கு 240 கன அடியும், சோழவரம் ஏரிக்கு 160 கன அடியும், கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிக்கு 60 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 45 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 11,757 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த 5 ஏரிகளின் தற்போதைய நீர் இருப்பு 3,971 மில்லியன் கன அடியாக உள்ளதாக நீர்வள ஆதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.