மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கடந்த சனிக்கிழமை இரவு மும்பை பாந்திராவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரை சுட்டுக் கொன்ற 2 பேர் உட்பட 3 பேரை மும்பை போலீஸ் நேற்று முன்தினம் கைது செய்தது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு கைதானவர்கள் உத்தர பிரதேசத்தை சேர்ந்த குர்மைல் பல்ஜித் சிங் (23), ஹரியானாவை சேர்ந்த தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் (19) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதையடுத்து, பாபா சித்திக்கை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக புனேவைச் சேர்ந்த பிரவின் லொங்கார் என்பவரும் மூன்றாவதாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக உத்தர பிரதேசம் பஹ்ரைச் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ்குமார் பலகிராம் (23) என்பவரையும் சொந்த ஊரில் வைத்து மும்பை போலீஸார் நேற்று கைது செய்தனர்.