மும்பை: மகாராஷ்டிரா ஸ்டேட் ஸ்கில்ஸ் டெவலப்மென்ட் யுனிவர்சிட்டியின் (எம்எஸ்எஸ்யு) பெயர் ரத்தன் டாடா மகாராஷ்டிரா ஸ்டேட் ஸ்கில்ஸ் டெவலப்மென்ட் யுனிவர்சிட்டி என மாற்றப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மறைந்த புகழ்பெற்றதொழிலதிபரும் நன்கொடையாள ருமான ரத்தன் டாடாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக, ரத்தன் டாடாவுக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என மகாராஷ்டிர அமைச்சரவை கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. மும்பையில் உள்ள மகாராஷ்டிரா ஸ்டேட் ஸ்கில்ஸ் டெவலப்மென்ட் யுனிவர்சிட்டி கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அங்கு பல்வேறு இளநிலை, முதுநிலை பட்டம் மற்றும் பட்டய படிப்புகள் வழங்கப்படுகிறது.
ஸ்டார்ட்-அப் வளர்ச்சி: இதுகுறித்து எம்எஸ்எஸ்யு துணைவேந்தர் டாக்டர் அபூர்வாபாக்கர் கூறும்போது, “இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு ரத்தன்டாடா அளப்பரிய பங்காற்றி உள்ளார். அவர் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியது மட்டுமல்லாமல், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களையும் ஊக்குவித்தார். இந்தப் பல்கலைக்கழகத்தின் தொலைநோக்கு பார்வை டாடாவின் எண்ணங்களுடன் பெரிதும் ஒத்துப் போகிறது. டாடாவின் பெயரை சூட்டுவதன் மூலம் இந்தப் பல்கலைக்கழகத்தின் மதிப்பு அதிகரிக்கும்” என்றார்.
சுங்க வரி விலக்கு: மகாராஷ்டிர முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “மும்பைக்குள் நுழையும் 5 சுங்கச் சாவடிகளிலும் இலரகுரக வாகனங்களுக்கு சுங்க வரி விலக்கு அளிக்கப்படும் என அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். இது நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது” என கூறப்பட்டுள்ளது.