ஈரோடு: பவானிசாகரை அடுத்த மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தெங்குமரஹாடா மலை கிராமம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கர்ப்பிணி ஒருவரை, பரிசல் மூலமாக மாயாற்றைக் கடக்க வைத்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஈரோடு மாவட்ட வனப்பகுதியை ஒட்டி, மாயாற்றின் கரையில் உள்ள தெங்குமரஹாடா மலை கிராமத்தில், 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்தைச் சோ்ந்த தெங்குமரஹாடா கிராமத்துக்குச் செல்ல, சத்தியமங்கலம் – பவானிசாகா் வழியாக, 25 கிமீ., தூரம் அடர் வனப்பகுதி வழியாக பயணிக்க வேண்டும். இந்த கிராமத்துக்கு கோத்தகிரி, மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை, மாலை என 2 அரசுப் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. இவை, மாயாற்றின் கரையில் நிறுத்தப்படும். ஆற்றில் வெள்ளம் குறைவாக இருக்கும்போது, மக்கள் நடந்தும், வாகனங்கள் மூலமும் தெங்குமரஹாடா கிராமத்துக்குச் செல்வர். மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, பரிசல் மூலம் கிராம மக்கள் ஆற்றைக் கடந்து சென்று வருகின்றனர்.
பருவமழை காலங்களில் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும், அப்போது, தெங்குமரஹாடா கிராமம் துண்டிக்கப்படுவதும் தொடர் சம்பவம். இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கனமழையால், மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த இரண்டு நாட்களாக, தெங்குமரஹாடா கிராம மக்கள் பரிசல் மூலமே மாயாற்றை கடந்து வருகின்றனர். இந்நிலையில், தெங்குமரஹாடா கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டது. அவரது உறவினர்கள், அந்தப் பெண்ணை பரிசலில் ஏற்றி மாயாற்றை கடந்து மறுகரைக்கு அழைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து தெங்குமரஹாடா கிராம மக்கள் கூறியது: “நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர், மாயாற்றில் வெள்ளமாக வருகிறது. இந்த மழையளவைத் துல்லியமாக கணிக்க முடியாத நிலையில், எப்போது வேண்டுமானாலும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதன் காரணமாகவே இதற்கு ‘மாயமான ஆறு’ என்பதைக் குறிக்கும் வகையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தெங்குமரஹாடா கிராம மக்கள் நாள்தோறும் மாயாற்றைக் கடந்து தான் வேலை, கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட எல்லா பணிகளுக்கும் செல்ல வேண்டியுள்ளது. இந்நிலையில், மழைக்காலம் வந்தால், மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு எங்கள் கிராமம் துண்டிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது.
இந்த காலகட்டங்களில் மிகவும் ஆபத்தான முறையில் பரிசலில் பயணித்து, மறுகரையை அடைய வேண்டியுள்ளது. தற்போது கூட கர்ப்பிணியை அபாயகரமான முறையில் பரிசலில் அழைத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மாயாற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என பல ஆண்டுகளாக நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், இதுவரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால், எங்கள் துயரம் தொடர்கிறது” என அவர்கள் தெரிவித்தனர். புலிகள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் வசிக்கும் வனப்பகுதியில் உள்ள தெங்குமரஹாடா கிராமத்தில் வசிப்பவர்களைக் காலி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதும், இது தொடர்பாக மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.