மீனவர்களுக்கான விசேட எரிபொருள் விலைச் சலுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக புத்தசாசனம், சமயம் மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த நாட்களில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டமை மீனவர்களுக்கு சலுகையளித்துள்ளதாகவும், மீன்பிடி தொழிலை குறிப்பிட்ட மட்டத்திற்கு உயர்த்துவதற்காக மேலும் எரிபொருள் சலுகையை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, மீனவர்களுக்கான எரிபொருள் மானியத்திற்காக 06 மாத காலப்பகுதிக்கு 5.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 3 இலட்சம் ரூபாய்க்கு உட்பட்டு, ஒரு லீற்றர் டீசலுக்கு 25 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், அதிகபட்சமாக 9375 ரூபாவுக்கு உட்பட்டு, 25 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 15 லீற்றர் மண்ணெண்ணெய் என்ற வகையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கு 25 ரூபா சலுகை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, தேர்தல் ஆணைக்குழுவின்; அனுமதியுடன் இந்த நிவாரணம் வழங்கப்படுவதாகவும், விலை சூத்திரத்தின்படி விலையில் ஏற்ற இறக்கம் ஏற்படலாம் என்று கூறிய அமைச்சர், மீனவர்களுக்கு டீசலின் ஊடாக 7.5 வீதமும், மண்ணெண்ணெய்யினூடாக 12.5 வீதம் நிவாரணமும் கிடைக்கும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.