மும்பையில் சாலையில் முந்திச் செல்வதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. ஆட்டோ டிரைவரான அவினாஷ் கதம் மும்பை, மலாடு, தீன்தோஷ் பகுதியில் உள்ள புஷ்பா பார்க் அருகில் தனது வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் சென்ற ஆக்டிவாவை முந்திச் செல்ல முயன்றார். அந்த ஆக்டிவாவை ஆகாஷ் என்பவர் ஓட்டிச் சென்றார். சாலையின் குறுகலான பகுதியில் ஆட்டோ டிரைவர் கதம் தனது வாகனத்தை வேகமாக கொண்டு வந்து இரு சக்கர வாகனத்தை முந்தியதாக தெரிகிறது. அந்நேரம் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு தவிர்க்கப்பட்டது. இதனால் ஆகாஷ் ஆட்டோ டிரைவர் கதமிடம் இது தொடர்பாக வாக்குவாதம் செய்தார். இதில் அவர்களிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. ஆகாஷ் தன்னிடமிருந்த ஏதோ ஒரு ஆயுதத்தால் டிரைவர் கதமை தாக்கி காயப்படுத்தியதாக தெரிகிறது. சம்பவ இடத்தில் கதம் ஆதரவாளர்கள் கூடினர். கதமும், அவரது நண்பர்களும் சேர்ந்து ஆகாஷை தரையில் இழுத்துப்போட்டு அடித்து உதைத்தனர். ஆகாஷுடன் அவரது மனைவியும் இருசக்கர வாகனத்தில் வந்தார்.
அவர் தனது கணவரை பாதுகாக்க போராடினார். ஆகாஷ் பெற்றோர் மற்றொரு ஆட்டோவில் அவர்களுடன் வந்தனர். அவர்களும் ஆட்டோவில் இருந்து இறங்கி தங்களது மகனை பாதுகாக்க போராடினர். ஆனால் கதமும், அவரது நண்பர்கள் 8 பேரும் சேர்ந்து ஆகாஷை சரமாரியாக அடித்து உதைத்ததில் ஆகாஷ் படுகாயம் அடைந்தார். உடனே அவரை பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் ஆகாஷ் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார். பெற்றோர் மற்றும் மனைவி கண் முன்பாக வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இக்கொலை தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் கதம், அவரது நண்பர்கள் 8 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவர்களைக் கைதுசெய்துள்ளனர். ஆகாஷை காப்பாற்றுவதற்காக அவரது தாயார் ஆகாஷ் தரையில் கிடந்த போது அவர் மீது படுத்து அடிப்பதை நிறுத்தும்படி கெஞ்சினார். ஆனால் கதமும், அவரது கூட்டாளிகளும் காலால் எட்டி உதைத்தும், மிதித்தும் அடித்தனர். தடுக்க வந்த ஆகாஷ் தந்தையையும் தாக்கினர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் பரவி இருக்கிறது.