நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி-யாக பதவி வகித்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு, 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்றார். வயநாடு தொகுதியில் 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் வெற்றிபெற்றார். ரேபரேலி தொகுதியில் 3,90,030 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஒருவர் 2 தொகுதிகளில் எம்.பி பதவி வகிக்க முடியாது என்பதால், வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸின் பாரம்பர்யமிக்க தொகுதியான ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி எம்.பி-யாக நீடிக்கிறார். வயநாடு தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்த ஷாபி பறம்பில் வடகரா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆகி உள்ளார்.
அது போன்று பினராயி விஜயனின் அமைச்சரவையில் தேவசம் போர்டு அமைச்சராக இருந்த கே.ராதாகிருஷ்ணன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆலத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். சி.பி.எம் தலைமையிலான கூட்டணியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரான ஒரே வேட்பாளர் கே.ராதாகிருஷ்ணன்தான். அவர் எம்.பி ஆனதும் சேலக்கரை தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து வயநாடு நாடாளுமன்றத் தொகுதியுடன், பாலக்காடு, சேலக்கரை சட்டமன்றத் தொகுதிகளும் காலியாக அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் இன்று அறிவித்துள்ளது. அதில் வயநாடு நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் பாலக்காடு, சேலக்கரை சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வயநாடு நாடாளுமன்றத் தொகுதி, பாலக்காடு, சேலக்கரை சட்டசபைத் தொகுதிகளுக்கும் நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
ராகுல் காந்தி ராஜினாமா செய்த தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் அவரது சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என டெல்லி காங்கிரஸ் தலைமை ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் வயநாட்டில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்லவும், வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிடவும் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியும் சென்றிருந்தார். வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது உறுதியானதால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.