2024-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டு வரும் வேளையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவில் பணிபுரியும் மூன்று பேராசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
“நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் அவை எவ்வாறு ஒரு நாட்டின் செழிப்பைப் பாதிக்கின்றன” என்பது பற்றிய ஆய்வுகளுக்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சைன்சஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆல்பிரட் நோபலின் நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசினை இந்த ஆண்டு டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ஏ. ராபின்சன் ஆகியோருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 1967 இல் பிறந்த டேரன் அசெமோக்லு, லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் சயின்ஸ், யுகேவில் இருந்து 1992ம் ஆண்டு PhD முடித்தவர். அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ்-ல் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருபவர்.
1963-ல் இங்கிலாந்தின் ஷெஃபீல்டில் பிறந்த சைமன் ஜான்சன், அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ்-ல் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் 1989ம் ஆண்டு PhD முடித்தவர். தற்போது தான் படித்த அதே கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
1960ல் பிறந்த ஜேம்ஸ் ஏ. ராபின்சன், 1993-ல் அமெரிக்காவின் நியூ ஹெவன்-ல் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் PhD முடித்தவர். தற்போது, சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியில் இருக்கிறார்.
ஐரோப்பியர்கள் உலகின் பெரும் பகுதியை காலனித்துவ ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்தனர். அந்த சமூகங்கள் இப்பகுதியில் இருக்கும் வளத்தை அடிப்படையாக வைத்து நிறுவனங்களை தொடங்கின.
ஆனால் இந்த நிறுவனங்கள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக செயல்படவில்லை. சில இடங்களில் காலனித்துவ ஆட்சியாளர்கள், ஐரோப்பிய மக்களின் நீண்ட கால நலனுக்காக அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளை உருவாக்கினர்.
ஆனால் மற்ற இடங்களில் பூர்வ குடி மக்களை சுரண்டுவதும், காலனி ஆட்சியாளர்கள் தங்கள் நலனுக்காக, தாங்கள் ஆட்சி செய்யும் இடங்களில் இருந்து வளங்களை எடுத்துச் செல்வதும் முக்கிய பணியாக கொண்டு இருந்தனர்.
இந்த வித்தியாசத்தை காலனித்துவ ஆட்சியில் இருந்த நாடுகளின் செல்வ செழிப்பில் உள்ள வேறுபாடுகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நடக்கும் பொருளாதார மாற்றங்கள், பாதிப்புகள், மக்கள் கிளர்ச்சி, பொருளாதாரத் தாக்கம், செல்வ செழிப்பில் தாக்கம் ஆகியவற்றை பற்றி இந்த மூன்று பேராசிரியர்கள் விளக்கியுள்ளனர். இதற்காகவே இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு இவர்களுக்கு கிடைத்துள்ளது.
ஸ்வீடன் தேசிய வங்கி பொருளாதார பரிசு என்றும் அறியப்படும் பொருளாதார நோபல் பரிசு 1968-ல் நிறுவப்பட்டது. இது ஆல்பிரட் நோபலின் நினைவாக வழங்கப்படுகிறது. இது ஸ்வீடன் ராயல் அகாடமி ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.