Rain: “மிதக்கும் கோவை, மதுரை… திராவிட மாடல் அரசின் அப்பட்டமான நிர்வாகத் தோல்வி" – சீமான் காட்டம்

வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், கோவை, மதுரை போன்ற மாவட்டங்களின் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முறையான மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் இல்லாமை காரணமாக கோவை, மதுரை, சிவகங்கை, காரைக்குடி, விருதுநகர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாநகரங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும், மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கமும் பெரும் வேதனையளிக்கிறது.

மதுரை மழை

மக்கள் மிக அடர்த்தியாக உள்ள தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்தான் அடிப்படைக் கட்டுமானம் முறையாகச் செய்யப்படாத காரணத்தால் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் வெள்ளத்தில் மிதக்கின்ற கொடுந்துயரை அனுபவிக்க வேண்டிய கொடுமைகள் நிகழ்கிறது என்றால், தற்போது தமிழ்நாட்டின் பிற நகரங்களும் அதேபோன்று மழை வெள்ளத்தில் தவிக்கும் நிலைக்கு ஆளாக்கி இருப்பது திராவிட மாடல் அரசின் அப்பட்டமான நிர்வாகத் தோல்வியாகும்.

இயற்கைச் சீற்றத்தை எவராலும் தடுக்க முடியாதென்றாலும், அம்மழையை எதிர்கொள்வதற்குரிய வடிகால் வாய்ப்புகளும், வாய்க்கால்களும், நீர்வழிப்பாதைகளும் ஒரு நகரத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டியது பேரவசியமாகும். அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தை ஆண்டு வரும் இருபெரும் திராவிடக்கட்சிகளும் அதனைச் செய்யத் தவறி, தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களை வாழத் தகுதியற்ற நிலம் போல மாற்றியிருப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாடு முழுவதும் மழைநீர் வடிகால் அமைப்பதற்கென ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கீடு செய்துவிட்டு, மழைவெள்ளத்தில் மக்களைத் தத்தளிக்க விடுவது என்பது திராவிட மாடல் அரசு நிர்வாகத்தில் நிகழ்கின்ற ஊழல் முறைகேடுகளின் உச்சமாகும்.

ஸ்டாலின்

2015-ம் ஆண்டு அ.தி.மு.க-வின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மதிப்பிட முடியாத அளவுக்குப் பேரிழிவை எதிர்கொண்டும், இன்றுவரை அதிலிருந்து பாடம் கற்காது இருந்துவிட்டு தி.மு.க அரசும் தொடர்ச்சியாக மக்களை வெள்ளப் பாதிப்பிற்குச் சிக்கித்தவிக்க விட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் மக்கள் பாதிக்கப்பட்ட பிறகுதான், அரசு விழித்துக் கொண்டு செயலாற்றுமென்றால், அதற்கு அரசின் நிர்வாகத் திறமையின்மைதான் முதன்மை காரணம்.

சிவகங்கையில் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில், அவசர அழைப்புகளை ஏற்கக்கூட பணியாளர் இல்லையென பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பல நூறுகோடிகளைக் கொட்டி கார் பந்தயம் நடத்தும் தி.மு.க அரசிற்கு மக்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தும் திறன் இல்லையா? அல்லது அக்கறை இல்லையா?இருந்தபோதிலும், தற்சமயத்தில் எல்லோரும் இணைந்து செயலாற்றினால்தான், மழைவெள்ள பாதிப்புகளிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியும் என்பதால், அரசுக்கும், அதிகாரிகளுக்கும், தன்னார்வத் தொண்டர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும், மின்வாரியப் பணியாளர்களென எல்லோருக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பை நல்கக் கோருகிறேன்.

சீமான்

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளை மேற்கொள்ள நாம் தமிழர் உறவுகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறேன். அவர்களும் களத்தில் செயலாற்றி, உதவிக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும், அரசு முழு வீச்சில் செயல்பட்டால் மட்டும்தான் மழைவெள்ளப் பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்டுக் கொண்டு வர முடியுமென்பதை உணர்ந்து, கூடுதல் கவனத்துடன் பணியாற்ற முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர்களை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தலைநகர் சென்னைக்குத் தற்போது கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் கடந்த காலங்களைப் போலல்லாது தமிழ்நாடு அரசு பன்மடங்கு கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு மக்களையும், அவர்தம் உடமைகளையும் பாதுகாக்க வேண்டுமெனவும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் தடுக்க முன்னெச்சரிக்கை சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.