‘தொழிற்சங்கம் அமைக்க சட்டப்பூர்வ அங்கீகாரம், 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம்’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 35 நாள்களாகப் போராடி வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சென்னை, ஶ்ரீபெரும்புதூர் ‘சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ தொழிலாளர்கள் தங்களின் போராட்டத்தை இன்று வாபாஸ் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்
16 ஆண்டுகளாகத் தொழிற்சங்கம் அமைக்காமல், நிறுவனத்திற்குக் கட்டுப்பட்டு வேலை செய்து வந்த சாம்சங் தொழிலாளர்கள், “சாம்சங் நிறுவனத்தின் உழைப்புச் சுரண்டலையும், அடக்குமுறைகளையும் இனியும் தாங்கிக் கொள்ள முடியாது” என்ற நிலையில், தொழிற்சங்கம் அமைத்து உரிமைகளைப் பெற காலவரையற்றப் போராட்டத்தை கடந்த செப்டம்பர் 9-ம் தேதி முதல் நடத்தி வந்தனர். போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு அமைப்பு களத்தில் துணை நின்றது.
போராடும் தொழிலாளர்களின் முதன்மையானக் கோரிக்கையாக ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ என்கிற பெயரில் தொழிற்சங்க அமைப்பதற்கான தொழிற்சங்கப் பதிவு கேட்டு நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடந்து வந்தது. ஆனால், ” ‘சாம்சங்’ என்ற பெயரை தொழிற்சங்கத்திற்கு வைக்க அனுமதிக்க மாட்டோம், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சிஐடியு அமைப்பினர் இதில் தலையிடக் கூடாது” என சாம்சங் நிர்வாகம் வாதிட்டு, தொழிற்சங்கக் கோரிக்கைக்கு அனுமதி மறுத்து வந்தது.
இதற்கிடையில் சாம்சங் நிறுவனத்திற்கும், போராடும் தொழிலாளர்களுக்கிடையேயும் அரசு தலையிட்டு ஆறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், சாம்சங் நிறுவனம் ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ என்கிற பெயரில் தொழிற்சங்கம் அமைக்கும் கோரிக்கைக்கு உடன்படவில்லை. இதனால் இப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
காவல்துறை அடக்குமுறையும், அதிரடி கைதும்
போராட்டத்தின் 35-வது நாளில் கடந்த அக்டோபர் 9-ம் தேதி ஶ்ரீபெரும்புதூர், எச்சூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டிருந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. சாம்சங் இந்தியா தொழிற்சங்க நிர்வாகிகள் 9 பேர் அதிரடியாக நள்ளிரவில் கைது செய்யப்பட்டது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. “போராடும் தொழிலாளர்கள் மீது காஞ்சிபுரம் காவல்துறையும், அரசும் அடக்குமுறைகளைக் கையாண்டு, சட்டப்படி போராடுபவர்களை அச்சுறுத்த முயற்சி செய்வதாக” முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரலங்கள் பலரும் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசைக் கடுமையாகக் கண்டித்திருந்தனர்.
மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சாம்சங் தொழிலாளர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ (எம்) கே.பாலகிருஷ்ணன், சிபிஐ முத்தரசன், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு, தமிழ்நாடு மனிதநேயக் கட்சியினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்திருந்தனர். திமுக கூட்டணி கட்சிகளாக சிபிஐ (எம்) கே.பாலகிருஷ்ணன், விசிக திருமாவளவன்; முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து இது குறித்துப் பேசி தீர்வு காண்பதாக உறுதியளித்திருந்தனர்.
போராட்டம் வாபஸ்
சாம்சங் தொழிலாளர்களின் 35-வது நாள் போராட்டமான இன்று, சாம்சங் இந்திய தொழிற்சங்கத் தலைவர் முத்துக்குமார் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் தலைமைச் செயலகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் தற்போது, சாம்சங் தொழிலாளர்கள் தங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். சாம்சங் நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளதாகவும், அரசும் தொழிலாளர்களுக்கு உறுதியளித்துள்ளதாகவும் சாம்சங் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.
‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ என்கிற பெயரில் தொழிற்சங்கம் பதிவு செய்வது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதற்கான தீர்வை நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி பெற்றுக் கொள்ளப்படும் என்றும் சாம்சங் தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்த விரிவான விளக்கம் நாளை கூடும் சிஐடியு கூட்டத்தில் அறிவிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து அரசு தரப்பில் வெளியாகியுள்ள பத்திரிகைச் செய்தியில், “சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்: சாம்சங் தொழிலாளர்கள் 09.09.2024 அன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டத்தை விரைவில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியிருந்தார்கள்.
இதன்படி மாண்புமிகு பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், மாண்புமிகு சிறு, குறு, நடுத்தரதொழில்கள் துறை அமைச்சர், மாண்புமிகு தொழிலாளர் நலன்-திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் ஆகியோரின் தலைமையில் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் இருதரப்பினரிடமும் பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள். இப்பேச்சுவார்த்தையின் பயனாக சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்களின் நலனைக் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக 15.10.2024 அன்று தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்பு சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நிர்வாகத் தரப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தப் பேச்சுவார்த்தையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
1. தொழில் அமைதி மற்றும் பொது அமைதி காக்கும் பொருட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும்.
2. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், மீண்டும் பணிக்கு திரும்பும்போது நிர்வாகம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக மட்டும் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
3. வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்தினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் நிர்வாகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது.
4. தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையின்மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகப் பதிலுரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகளை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டு. வேலை நிறுத்தத்தை கைவிட்டு, தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்புவதாக தெரிவித்தனர்.
இதனால், சாம்சங் தொழிற்சாலையில் நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்ததது. தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப உள்ளார்கள்” என்று கூறப்பட்டிருக்கிறது.
சிஐடியூ மற்றும் சாம்சங் தொழிலாளர்கள் தரப்பிலிருந்து `போராட்டம் வாபஸ்’ தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.