ஆத்ம வனம் – சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

காலை 6 மணிக்குள் ஒரு டீ குடித்தே ஆக வேண்டும். இல்லையென்றால், பித்து பிடித்தது போல ஆகிவிடும்.

 நேற்றிரவு மச்சினி வீட்டிற்கு வந்தோம். வீடு கிராமத்துக்கு வெளியே இருந்தது.

காலை 5 மணிக்கே விழிப்பு வந்தது. டீக்கடை இருக்குமா? இல்லையா? எனத் தெரியவில்லை. இரவே கேட்டு வைத்திருக்கலாம். யாரிடம் கேட்பது?

என்னைத்தவிர எல்லோரும் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

வீட்டுக் கதவின் க்ரீச் சத்தம் கூட கேட்காத அளவிற்குப் பூனை மாதிரி வெளியேறினேன்.

 வாசலிருந்து இறங்கியதும் ரோடு தான். ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை.

 கிராமத்தின் மையப்பகுதியைக் கணித்து  நடக்கலானேன். அங்கே டீக்கடை இருக்கலாம்.

 சற்று தூரத்தில் `ஆத்ம வனம்’ என எழுதப்பட்ட சுற்றுச்சுவரை நிறைய மரங்கள் இருக்கிறதா என ஆர்வமாகப் பார்த்தேன். இரவு பிணம் எரிக்கப்பட்ட சாம்பல் குவிக்கப்பட்டு இருந்தது.

 தலையை அவசரமாகத் திருப்பிக்கொண்டேன்.

பேஸ்மட்டம் வீக்.

 எனக்குச் சுடுகாடுகள் மீது எந்தப் பயமும் கிடையாது; அதன் மீதான என் மதிப்புரை வேறு மாதிரியானது.

காரணம், நான் பணிபுரிந்த இடங்கள் பெரும்பாலும் சுடுகாடுகளை ஒட்டியே அமைந்தவை.

 எனக்கு நினைவு தெரிந்த முதல் சுடுகாடு நான் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்த பள்ளிக்கு அருகில் இருந்தது தான்.

மத நல்லுணக்க சுடுகாடு

இடைவேளைகளில் புதைத்த இடங்களில் அடையாளமாக வைக்கப்பட்ட செடிகளின் மீது முறைவைத்து சிறுநீர் அடிப்பதில் தான் போட்டாபோட்டி.

அது தவிர மேலெழுந்து நிற்கும் எலும்புக் கூடுகளை எட்டி உதைப்பதும் விபர அறியாத விளையாட்டுகளில் ஒன்று.

 இருள் இன்னும் முழுமையாக விலகவில்லை, ஆனாலும் நடக்க ஆரம்பித்தேன்.

 எதிரில் ஒரு சைக்கிள் வருவது தெரிந்தது. அருகில் வரும்போது டீ விற்பவர் என உறுதியானது.

 சைக்கிள் அருகில் வந்ததும் “அண்ணா டீ இருக்கா?” எனக்கேட்டேன்.

 சுக்குக்காப்பி…

 தம்பி ஊருக்கு புதுசா?

 ஆமாங்க…

நான் இன்னார் வீட்டுக்கு வந்துள்ளேன் என விளக்கமாகச் சொன்னேன்.

 ஓ… அந்த டீச்சர் வீட்டுக்கா?

 ஆமாம். ஒரு காப்பி கொடுங்க

 காப்பி கொட்டாமல் லாவகமாக மேலும் கீழும் கைகளை வீசுவதைக் கண்கொட்டாமல் பார்த்தேன்

ஏதோ ஒரு ரீல்ஸ்லில் பார்த்து வியந்த அளவுக்கு ஸ்டைலாக டீயை ஆற்றித் தந்தார்.

 சூடாக ஒரு சிப் உள்ளே இழுத்ததும், உடல் ஜிவ்வென்றது.

 இப்படிச் சுடச்சுட சுக்கு காப்பி  குடித்து நீண்ட நாட்களாகி விட்டது. கடைசியாக ஊர் பாட்டி இறந்த போது குடித்தது.

 பாட்டிக்கு கொட்டுமொழுக்கு போட்டு சீர் செய்து வழியனுப்ப வேண்டுமென்பதால் பாட்டியை ஒரு நாள் இரவு கிடத்தி வைத்திருந்தார்கள்.

Representational Image

சடங்குகள்  நீண்டதால் யாரும் தூங்கவில்லை. அந்தத் தூக்கத்துக்கு ஈடுகொடுக்க உள்ளூர்க்காரர் சுக்கு காப்பி விற்று வந்தார்.

அவர் பாட்டியின் பெருமைகளைச் சொல்லிச் சொல்லியே காப்பியை விற்றுத் தீர்த்தார்.

 என்முறை வரும்போது பாட்டியைப் பற்றிச் சொன்னது இப்போது நினைத்தாலும் புல்லரிக்கும்.

 “அப்பத்தா தலையில் ஒரு குடம், இடுப்பில் ஒரு குடம் வைச்சு நடந்து வருவா பாருங்க…”

 “மனுஷியா… அவ பத்து படி ராகியை ஒரே மூச்சில அரைச்சு வீசிடுவா”

 “சும்மாவா? நாத்து நடவ போயிட்டு, அந்த குடிகார மனுஷின சமாளிச்சு ஏழுபேரை கரை சேர்த்தினா”

 “உன்னையெல்லாம்… சின்ன வயசில இடுப்பில வைச்சுட்டு கோயில்குளமுன்னு சுத்துவா”

 இந்தப் பெருமைகளையெல்லாம் கேட்டபின் சுக்கு காப்பி குடிக்காமல் இருப்பேனா?

 அன்று குடித்த சுக்கு காப்பியின் மணம் இப்போதும் அடித்தது.

 எனக்குக் கொடுத்த கையோடு பீடியைப் பற்ற வைத்தார்.

 நான் பீடி புகையை உற்றுப்பார்த்ததை அவர் ரசிக்கவில்லை. அது சுருள்சுருளாகப் பறந்தது.

 நமக்கு பீடி குடிக்காம வேலை ஓடாது தம்பி.

 ஆளாளுக்கு ஒரு பழக்கம்; மனதுக்குள் சிரித்துக்கொண்டேன்.

 இல்ல… இல்ல, டீ நல்லாருக்கு அண்ணா…

 பத்து வருஷமா இதே பொழப்புதாங்க…

 பீடியை மூன்றுமுறை இழுத்து விட்டார்.

 நான் 20 ரூ நோட்டை நீட்டினேன்.

சைக்கிளை இடுப்பில் சாய்த்துக்கொண்டே நோட்டை  வாங்கிக் கொண்டு சில்லரை காசுகளைத் தேடினார்.

 சில்லரை காசுகளை பொரிக்குள் கலக்கி வைத்திருந்தார். இதொன்றும் எனக்கு ஆச்சரியம் தரவில்லை.

அம்மா கடுகு டப்பாவுக்குள் தான் சில்லரையைப் போட்டு வைத்திருப்பாள்.

மணி பர்ஸ்கள் பிரபலம் ஆகும் வரை அம்மாக்களின் பாதுகாப்பு பெட்டகங்களை நாசாவாலும் கண்டுப்பிடிக்க முடியாது.

 மீதி 10 ரூபாயை, இரண்டு ஒரு ரூபாய்,  ஒரு இரண்டு ரூபாய், ஒரு ஐந்து ரூபாய் நாணயங்களாக கொடுத்தார். மீதி ஒரு ரூபாய்க்கு காசுகளை தேட ஆரம்பித்தார்.

Representational Image

அவரிடம் ஜிபே இருந்திருந்தால் எனக்கு வேலை எளிதாயிருக்கும்.

 அண்ணா இருந்தா கொடுங்க…இல்லைன்னா விடுங்க

 நேத்து நைட்டு தான் இதெல்லாம் கிடைச்சுது தம்பி..

 நகர ஆரம்பித்தபோது. “நேத்து செத்தா, இன்னிக்கு பால். ஒரு ரூபா வைச்சு என்னத்தா ஆகப்போகுது” எனக்கூறிக்கொண்டே குங்குமம் தடவிய ஒரு ரூபாய் நாணயத்தை நீட்டினார்.

 டீ குடித்தாயிற்று. வந்த வேலை முடிந்ததால், மீண்டும் வந்த வழியில் திரும்பி நடந்தேன்.

“ அதென்ன நேத்து செத்தா, இன்னிக்கு பால்? “ யோசித்தேன்.

அவரும் சைக்கிளில் பின் தொடர்வது போல உணர்ந்தேன்.

 திரும்ப ஆத்ம வனத்தைத் தாண்டும் போது எதிரில் பாய்களும் தலையணைகளும் வீசி எறிந்திருந்தார்கள்.

 சில மூக்குக் கண்ணாடிகள் உடையாமல் கிடந்தன.

ஆத்திரமாக வந்தது.

இறந்தவர்கள் இதையெல்லாம்  தேடி வருவார்கள் என்ற கதைகளும் உண்டு. இன்றும் பேய்க்கதைகள் கிராமங்களில் உலா வந்து கொண்டு தான் இருக்கின்றன.

 வீட்டருகில் வந்த போது திருப்பிப்பார்த்தேன். 

சைக்கிள் சுடுகாட்டுக்குள் போனது.

-சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.