திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கான வருடாந்திர மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
இக்கோயிலுக்கு செல்ல விரும்பும் பக்தர்கள், தரிசனம் மற்றும்பிரசாத டிக்கெட்களை இணையவழியில் முன்கூட்டியே பெற்றுக்கொள்ளலாம். அதேநேரம், முன்பதிவு செய்யாதவர்கள் சபரிமலைக்கு சென்ற பிறகு தேவசம்வாரியம் சார்பில் குறிப்பிட்ட இடங்களில் செயல்படும் மையங்களில் தரிசன டிக்கெட் (ஸ்பாட் புக்கிங்) பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிலையில், இந்த ஆண்டுநேரில் தரிசன டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என்றும் இணைய வழியில் மட்டுமே தரிசனம் மற்றும் பிரசாத டிக்கெட் வழங்கப்படும் எனவும் கேரள தேவசம் வாரிய அமைச்சர் வி.என்.வாசவன் கடந்தசில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். அதேநேரம், சபரிமலைக்கு வரும் அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். இதற்குபல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஸ்பாட் புக்கிங் முறையை ரத்துசெய்யும் முடிவை கேரள அரசுகைவிடவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என பாஜக எச்சரிக்கை விடுத்திருந்தது. இதுபோல, ஸ்பாட் புக்கிங் வசதியும் தொடர வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஆளும் இடதுசாரி முன்னணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வலியுறுத்தியது.
இந்நிலையில், கேரள சட்டப்பேரவையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் வி.ஜாய் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பினராயி விஜயன் அளித்த பதிலில் கூறியதாவது:
திருப்பதி உள்ளிட்ட கோயில்களில் சுவாமியை தரிசிப்பதற்கான இணையவழி முன்பதிவு முறை வெற்றிகரமாக செயல்படுகிறது. அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 2011-ம்ஆண்டு இந்த முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நடைமுறையை மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதுதான் அரசின் குறிக்கோள்.
இது தொடர்பாக கடந்த 5-ம் தேதி ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முன்பதிவின்போது அவர்களின் முழு விவரத்தையும் சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பக்தர்கள் விபத்தில் சிக்கினால் அடையாளம் காண வசதியாக இருக்கும்.
மேலும் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பக்தர்களுக்கு சிறப்பான வசதிகளை செய்து தர முடிவு செய்யப்பட்டது. குறிப்பாக, சபரிமலைக்கு இணையவழியில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களும் ஐயப்பனை தரிசனம் செய்ய தேவையான வசதிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆனால், ஸ்பாட் புக்கிங் முறைநடை முறையில் இருக்குமா என்பதை பினராயி விஜயன் தெரிவிக்கவில்லை.