கோவை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில், சாலைகளில் மழை நீர் தேங்கியது. சாய்பாபா காலனி – சிவானந்தா காலனி இடையே உள்ள ரயில்வே மேம்பாலத்தில் அடுத்தடுத்து இரண்டு பேருந்துகள் மழை நீரில் சிக்கின.
தீயணைப்புத்துறை விரைந்து சென்று பேருந்துகளை மீட்டது. இந்தப் பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. எப்போது மழை பெய்தாலும், அங்கு மழை நீர் தேங்கி போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படும்.
இந்நிலையில் மழை பெய்யும்போது, வாகன ஓட்டிகள் அந்த ரயில்வே மேம்பாலத்துக்கு கீழ் தண்ணீரின் அளவை தெரிந்து கொள்ளும் வகையில் பச்சை, மஞ்சள், சிவப்பு வண்ணத்தில் இரண்டு பக்கமும் எச்சரிக்கை கம்பம் நடப்பட்டுள்ளது.
மழை பெய்யும்போது, கம்பத்தில் பச்சை நிறம் தெரிந்தால் வாகனங்கள் வழக்கம் போல சென்று கொள்ளலாம். அதுவே மஞ்சள் நிறம் தெரிந்தால் வாகனங்களை சற்று கவனமாக இயக்க வேண்டும். சிவப்பு நிறம் தெரிந்தால் வாகனங்கள் செல்லக்கூடாது.
மழை நீரின் அளவு சிவப்பு நிறத்துக்கு வரும்போது, காவல்துறையினர் உடனடியாக அங்கு போக்குவரத்தை நிறுத்தி விடுவார்கள். இரண்டு சக்கர வாகனங்களை பொறுத்தவரை, தண்ணீரின் அளவு மஞ்சள் நிறத்தில் இருக்கும்போதே அந்த வழியில் செல்லாமல் இருப்பது நல்லது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதில் தண்ணீரின் அளவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்தமுறை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் விரைவில் மற்ற மேம்பாலங்களிலும் இதுபோல எச்சரிக்கை கம்பம் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.