புதுடெல்லி: கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சஷாங்க் ஜே. ஸ்ரீதரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநிவாசன் ஆஜரானார். அப்போது அவர் வாதிடும்போது, “தேர்தல்பிரச்சாரத்தின்போது பல்வேறு இலவசப் பொருட்களை வழங்குவதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளிக்கின்றன. இந்த இலவசப் பொருட்களை அளிப்பதாக அரசியல் கட்சிகள் அறிவிப்பதைத் நிறுத்தவேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொள்கிறோம். இந்த இலவசப் பொருட்களை பொதுமக்களுக்கு அளிப்பதால் அரசு கஜானாவுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படுகிறது” என்றார்.
இதையடுத்து இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு, தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இதேபோல் இலவசப் பொருட்கள் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த மனுக்களையும் விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.