லக்னோ: ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது பெண் குழந்தையை ரயில்வே போலீஸார், உ.பி. போலீஸார் சுமார் 16 கிலோமீட்டர் தேடி மீட்டனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் லலித்பூர் தடத்தில் அண்மையில் தந்தையுடன் ரயிலில் பயணம் செய்த 8 வயது பெண் குழந்தை எமர்ஜென்சி ஜன்னல் வழியாக தவறி கீழே விழுந்துவிட்டது. இதையடுத்து, உடனடியாக ரயில்வே போலீஸாருக்கு அந்த குழந்தையின் தந்தை தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து ரயில் நிறுத்தப்பட்டு அங்கு உள்ளூர் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். உள்ளூர் போலீஸாரின் உதவியுடன் ரயில்வே போலீஸாரும் தண்டவாளத்தின் வழியே தேடிச் சென்றனர். மேலும் அந்த ரயில் தடத்தில் வரவிருந்த ரயில்களும் நிறுத்தப்பட்டன. சுமார் 16 கிலோமீட்டர் தூரம் போலீஸார் நடந்தே சென்று பெண் குழந்தையைத் தேடினர். அப்போது தண்டவாளத்தின் அருகே பெண் குழந்தை விழுந்து கிடந்ததைக் கண்ட போலீஸார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சுமார் 16 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று குழந்தையை கண்டுபிடித்து காப்பாற்றிய ஜான்ஸி, லலித்பூர் பகுதியைச் சேர்ந்த போலீஸார், ரயில்வே போலீஸாருக்கு குழந்தையின் தந்தை நன்றி தெரிவித்தார். காயமடைந்த குழந்தைக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குழந்தையை மீட்டு போலீஸார் ஒருவர் அழைத்துவரும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த பலரும் உ.பி.போலீஸார், ரயில்வே போலீஸாருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் ஒருவர் கூறும்போது, “உ.பி. போலீஸாரின் செயல்பாடுகளைப் பார்த்து நான்பெருமை கொள்கிறேன்” என்றார். மற்றொருவர் கூறும்போது, “நமதுமாநிலத்தைச் சேர்ந்த காக்கிச்சட்டை அணிந்த போலீஸாரின் பணிகள் பாராட்டுக்குரியவை. பெருமைப்படுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.