கடந்த 3 ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் இல்லை – இந்திய பெண்கள் அணியை விமர்சித்த மிதாலி ராஜ்

புதுடெல்லி,

பெண்கள் டி20 உலகக்கோப்பை யு.ஏ.யி-ல் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்ட 10 அணிகளில், லீக் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்நிலையில், உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து முன்னாள் வீராங்கனை சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஐக்கிய அரபு அமீரகத்தின் மெதுவான ஆடுகள சூழலுக்கு ஏற்ற வகையில் இந்திய அணி விளையாடவில்லை. பேட்டிங் யூனிட்டில் யாருக்கு எந்த ரோல் என்ற புரிதல் இல்லாமல் ஆடினர். பீல்டிங் சரியாக செய்யவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் நாம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், இறுதி வரை சென்று தோல்வி கண்டோம்.

கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக அணியில் எந்த வளர்ச்சியையும் நான் பார்க்கவில்லை. சிறந்த அணியை வீழ்த்துவது முக்கியம். ஆனால், மற்ற அணிகளை வீழ்த்தி நாம் நிறைவு பெற்றது போல உணர்கிறோம். மற்ற அணிகள் வளர்ச்சி அடைந்துள்ளதை நாம் கவனிக்க வேண்டும். அணியின் லோயர் மிடில் ஆர்டரில் முன்னேற்றம் இல்லை.

அந்த இடத்தில் பலரை நாம் முயற்சித்து பார்த்திருக்க வேண்டும். அதையும் செய்ய தவறி உள்ளோம். ஆடவர் அணியில் அதை செய்து பலன் அடைந்துள்ளனர். தேர்வாளர்கள் கேப்டனை மாற்ற வேண்டும் என நினைத்தால் இளம் வீராங்கனைகள் உள்ளனர். ஸ்மிருதி, ஜெமிமா போன்றவர்கள் அணியில் உள்ளனர். ஸ்மிருதி, நீண்ட காலமாக துணை கேப்டனாக உள்ளது கவனிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.