கனமழை நீடிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கிருஷ்ணகிரி/ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் மாணவ, மாணவிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். பாரூரில் 34.6, நெடுங்கல்லில் 26 மிமீ மழை பதிவானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி, ஓசூர், போச்சம்பள்ளி, வேப்பனப்பள்ளி, பர்கூர், ஊத்தங்கரை, சூளகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய, விடியப் பெய்த மிதமான மழை காலை 7.15 மணி வரை நீடித்தது.

தொடர்ந்து, சாரல் மழை பெய்த நிலையில் மழையில் நனைந்தபடி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் சிரமத்துடன் சென்றனர். காலை 10 மணி முதல் விட்டு, விட்டு மழை பெய்தது. பிற்பகல் 1 மணியளவில் கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. மேலும், சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீருடன், கழிவுநீர் கலந்து சாலையில் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியதால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

குறிப்பாக, கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலை, ரவுண்டானா பகுதியில் மழைநீர், கழிவுநீர் கலந்து சாலையில் ஓடியதால் வாகனங்கள் சாலையில் ஊர்ந்தபடி சென்றன. மேலும், நகரில் பல இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

ஓசூர் அருகே மத்திகிரியில் நேற்று பெய்த மழையின்போது, தேன்கனிக்கோட்டை
சாலையோரம் இருந்த மரம் வேருடன் சாய்ந்தது.

இதனிடையே, நேற்று மதியம் அனைத்துப் பள்ளிகளுக்கும் அரை நாள் விடுமுறை அளித்து ஆட்சியர் கே.எம்.சரயு உத்தரவிட்டார். மேலும், மழை நின்ற பின்னர் அனைத்து மாணவ, மாணவிகளையும் பாதுகாப்பாகப் பள்ளி வாகனங்களில் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, அதன் பின்னரே ஆசிரியர்கள் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக பெற்றோர்கள் சிலர் கூறும்போது, “மாவட்டத்தில் காலை முதலே விட்டு, விட்டு மழை பெய்ததால், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால், மதியத்துக்கு மேல் அரை நாள் விடுமுறை விடப்பட்டதால், அரசுப் பள்ளி காலையில் மாணவர்கள் வீடுகளிலிருந்து பள்ளிக்கும், மதியம் பள்ளியிலிருந்து வீடுகளுக்கும் மழையில் நனைந்தபடி வந்து செல்லும் சிரமம் ஏற்பட்டது” என்றனர்.

மாவட்டம் முழுவதும் நேற்று காலை 7 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்: பாரூர் 34.6, நெடுங்கல் 26, பெணுகொண்டாபுரம் 25.2, ராயக்கோட்டை 20, கிருஷ்ணகிரி 19.2, சின்னாறு அணை, போச்சம்பள்ளியில் தலா 17, கிருஷ்ணகிரி அணை 16.2, சூளகிரி 15, பாம்பாறு அணை 13, தேன்கனிக்கோட்டை, ஊத்தங்கரை, ஓசூரில் தலா 11, கெலவரப்பள்ளி அணையில் 7 மிமீ மழை பதிவானது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.