ஸ்ரீநகர்: காஷ்மீர் ‘யூனியன் பிரதேச’ அந்தஸ்து தற்காலிகமானது என முதல்வராகப் பதவியேற்ற உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா இன்று (அக்.16) பதவியேற்றார். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்ட பிறகு, தேர்வு செய்யப்பட்ட முதல் முதல்வர் இவர்தான். முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் லடாக் தனி யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி – காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 55 இடங்களை பெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. சுயேச்சை எம்எல்ஏ.க்கள் 4 பேர், ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஒருவர் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவளித்துள்ளனர். இந்நிலையில் ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ள காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்க மறுத்துள்ளதாகத் தெரிகிறது. வெளியில் இருந்து ஆட்சிக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும், ஜம்மு காஷ்மீர் முதல்வராக தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா பதவியேற்றார். அதோடு, ஜம்முவைச் சேர்ந்த அப்பகுதியில் அனைவருக்கும் பரிச்சயமான சுரிந்தர் குமார் சவுத்ரி துணை முதல்வராகவும் பதவியேற்றார். ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, அம்மாநிலத்தின் முதல்வர், துணை முதல்வர் மற்றும் சதீஷ் சர்மா, சகினா இட்டோ (Sakina Itoo), ஜாவேத் ராணா, ஜாவேத் தார் ஆகிய 4 அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். உமர் அப்துல்லா, 2009க்குப் பிறகு இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார்.
தாத்தா ஷேக் அப்துல்லா மற்றும் தந்தை ஃபரூக் அப்துல்லாவுக்குப் பிறகு முதலவர் பதவியை வகிக்கும் அப்துல்லா குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை இவராவார். இந்நிகழ்ச்சியில் இண்டியா கூட்டணியின் தலைவர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இடதுசாரி தலைவர்கள் பிரகாஷ் காரத் மற்றும் ராஜா, திமுகவின் கனிமொழி மற்றும் என்சிபி-யின் சுப்ரியா சூலே ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பிடிபி தலைவர் மெகபூபா முப்தியும் கலந்து கொண்டார்.
பதவியேற்புக்குப் பின்னர் உமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் முதல்வராக நான் பதவியேற்றிருக்கிறேன். முன்னர் பணியாற்றியதைப் போலவே மகிழ்ச்சியாக பணியாற்றுவேன். இந்த யூனியன் பிரதேசத்தின் அந்தஸ்து தற்காலிகமானதுதான் என்று நம்புகிறேன். மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க இந்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற நாங்கள் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கான சிறந்த வழி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதன் மூலம் தொடங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.