சேலம்: சேலம் மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் பல இடங்களில் சாரல் மழை மட்டுமே காணப்பட்ட நிலையில் சேலம், ஏற்காடு உள்பட சில இடங்களில் கனமழை கொட்டியது.
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக ஓமலூரில் 18 மிமீ, சங்ககிரியில் 16.1 மிமீ, தலைவாசலில் 15 மிமீ, மழை கொட்டியது. பிற இடங்களில் பெய்த மழை விவரம் (மிமீ.,-ல்): மேட்டூர் 13.8, டேனிஷ்பேட்டை 9.5, சேலம் 9.2, கரியகோவில், ஏற்காட்டில் தலா 9, கெங்கவல்லி 8, எடப்பாடி 7.2, தம்மம்பட்டி, ஆனைமடுவில் தலா 7, வீரகனூரில் 6, ஏத்தாப்பூரில் 4, வாழப்பாடி 1.5 மிமீ மழை பதிவானது.
இதனிடையே, சேலத்தில் நேற்று நண்பகலில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டியது. புதிய பேருந்து நிலையம், மெய்யனூர், திருவாக்கவுண்டனூர் உள்ளிட்ட இடங்களில், கனமழை காரணமாக சாலையில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக, சாலையில் போக்குவரத்து வெகுவாக குறைந்திருந்தது.
இதேபோல், ஏற்காட்டிலும் நேற்று கனமழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில் பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது. கடந்த சில நாட்களாக, அவ்வப்போது பெய்து வரும் மழையினால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதையொட்டி பள்ளிகளுக்கு இன்று (16-ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தொடர் மழையையொட்டி சேலம் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு இன்று (16-ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுகிறது, என தெரிவித்துள்ளார்.