புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் முதல்வராக பதவியேற்றுள்ள உமர் அப்துல்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், “ஜம்மு காஷ்மீர் முதல்வராக பதவியேற்றுள்ள உமர் அப்துல்லாவுக்கு வாழ்த்துகள். மக்களுக்கு சேவையாற்றுவதில் அவரது முயற்சிகள் மிகச் சிறப்பாக அமைய அவரை வாழ்த்துகிறேன். ஜம்மு – காஷ்மீரின் முன்னேற்றத்திற்காக அவருடனும், அவரது குழுவினருடனும் மத்திய அரசு இணைந்து பணியாற்றும்” என தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஜம்மு காஷ்மீர் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள உமர் அப்துல்லாவுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! பதவியேற்பு நிகழ்ச்சிக்கு, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா எனக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாகக் கண்காணிப்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டியுள்ளதால், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவரான கனிமொழியை என் சார்பாகவும் கட்சியின் சார்பாகவும் வாழ்த்துகளைத் தெரிவிக்க அனுப்பி வைத்தேன்.
இந்தியத் துணைக் கண்டத்தில் தென் முனையில் உள்ள தமிழ்நாடும் வடமுனையில் உள்ள ஜம்மு காஷ்மீரமும் உரக்கக் குரலெழுப்பும் மாநில உரிமைகளை வென்றெடுக்கும் ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்து பயணிப்போம்! வெற்றி காண்போம்!” என குறிப்பிட்டுள்ளார்.
முதல்வராக பதவியேற்ற பிறகு உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள முதல் எக்ஸ் தள பதிவில், “ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைவரிடம் பேசினேன். நான் சாலை வழியாக எங்கு சென்றாலும் போக்குவரத்து நிறுத்தம் இருக்கக்கூடாது. பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கவும், சைரன்களின் பயன்பாடு குறைவாக இருக்கவும் அவருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.
எனது அமைச்சரவை சகாக்களையும் இதே முன்மாதிரியைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். நமது நடத்தை மக்களுக்கு நட்பானதாக இருக்க வேண்டும். நாங்கள் இங்கு மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளோம், அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த அல்ல. காவல்துறையினர் தங்கள் தடியை அசைப்பது அல்லது ஆக்ரோஷமான சைகைகளைப் பயன்படுத்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உங்கள் வாக்கு பலத்துடன் நீதி மற்றும் ஜனநாயகத்தின் குரலை உயர்த்தியதற்காக ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு நன்றி மற்றும் எதிர்காலத்திற்கான நல்வாழ்த்துக்கள்.
மக்களின் நிலுவையில் உள்ள உரிமைகளை மீட்டெடுப்பதற்கும், அதன் அனைத்து வாக்குறுதிகள் மற்றும் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும் ‘இந்தியா’ கூட்டணி அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படும்.” என கூறியுள்ளார்.