இஸ்லாமாபாத்: “பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது எனும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ – SCO) முதன்மையான குறிக்கோள்களை அடைய நேர்மையான பேச்சுவார்த்தை முக்கியம்” என்று அதன் உச்சி மாநாட்டில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற எஸ்சிஓ உச்சி மாநாட்டில் உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “எஸ்சிஓ-வின் முதன்மையான குறிக்கோள்களான பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது, தற்போதைய காலத்தில் இன்னும் முக்கியமாகிறது. இதற்கு நேர்மையான பேச்சுவார்த்தை, நம்பிக்கை, நல்ல அண்டை நாடு மற்றும் எஸ்சிஓ சாசனத்தின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவை தேவை. இந்த ‘மூன்று தீமைகளை’ எதிர்கொள்வதில் எஸ்சிஓ உறுதியாகவும் சமரசமின்றியும் இருக்க வேண்டும்.
உலகமயமாக்கல் மற்றும் மறுசீரமைத்தல் என்பது இன்றைய யதார்த்தம். எஸ்சிஓ நாடுகள் இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். ஒத்துழைப்பு என்பது பரஸ்பர மரியாதை மற்றும் இறையாண்மை சமத்துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும். ஒருதலைப்பட்சமாக செயல்படக் கூடாது. வர்த்தகம் மற்றும் போக்குவரத்தில் உலகளாவிய நடைமுறைகளை நாம் தேர்ந்தெடுக்காவிட்டால் எஸ்சிஓ-வால் முன்னேற முடியாது.
போட்டித்தன்மையை அதிகரிக்கவும், தொழிலாளர் சந்தைகளை விரிவுபடுத்தவும் தொழில்துறை ஒத்துழைப்பு முக்கியம். எம்எஸ்எம்இ (MSME) ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை நடவடிக்கை ஆகியவை சாத்தியமான வழிகள். ஆரோக்கியம், உணவு அல்லது எரிசக்தி பாதுகாப்பு எதுவாக இருந்தாலும், நாம் ஒன்றாகச் செயல்படுவது நல்லது.
இந்திய முயற்சிகளான டிபிஐ, பெண்கள் தலைமையிலான மேம்பாடு, ஐஎஸ்ஏ, சிடிஆர்ஐ, மிஷன் லைஃப், ஜிபிஏ, யோகா, மில்லட்ஸ், இன்டர்நேஷனல் பிக் கேட் அலையன்ஸ் போன்றவை எஸ்சிஓவுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஐநா பாதுகாப்பு அவையை அதிக பிரதிநிதித்துவம் கொண்டதாகவும், உள்ளடக்கிய, வெளிப்படையான, திறமையான, பயனுள்ள, ஜனநாயகமான மற்றும் பொறுப்புணர்வுள்ளதாக உருவாக்க எஸ்சிஓ வழிவகுக்க வேண்டும்.
எஸ்சிஓ-வின் நோக்கங்களை அடைவதற்கான நமது உறுதியை புதுப்பிக்க, பரஸ்பர நலன்களை மனதில் வைத்து, சாசனத்தில் இருக்கும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவைகளை கடைபிடிப்பது அவசியம். எஸ்சிஓ என்பது உலகின் பெரும்பகுதியை மாற்றும் சக்திகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அந்த பொறுப்பை நிறைவேற்றுவோம்” என வலியுறுத்தினார்.