முகமது ஷமிக்கு மீண்டும் காயம்! இனி கிரிக்கெட் விளையாடுவது கஷ்டம்?

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதால் சர்வதேச அணிக்கு திரும்புவது இன்னும் தாமதமாகலாம் என்று சமீபத்தில் செய்திகள் வெளியானது. இதனை இந்திய கேப்டன் ரோஹித் சர்மா உறுதிப்படுத்தினார். முகமது ஷமி கடைசியாக 2023 உலக கோப்பையில் விளையாடினார். அதன் பிறகு எந்த ஒரு போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்த ஆண்டு பிப்ரவரியில் அவரது வலது குதிகால் தசைநார் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் பயிற்சியில் ஈடுபட தொடங்கினார் ஷமி. நியூசிலாந்து தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முழங்காலில் மீண்டும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்னும் சிறிது காலம் ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவில் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நியூசிலாந்து தொடர் அல்லது ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பார்டர் கவாஸ்கர் தொடருக்கு முன்பு ஷமி முழுவதும் குணமடைவாரா என்பதை சொல்வது மிகவும் கடினம். குணமாகி வந்த ஷமிக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. அவரது முழங்காலில் வீக்கம் உள்ளது. அவர் உடற்தகுதி பெற்று கிட்டத்தட்ட 100% குணமாகினார். ஆனால் மீண்டும் முழங்காலில் வீக்கம் ஏற்பட்டது. இதனால் அடுத்தடுத்த தொடர்களில் ஷமி பங்கேற்பது கடினம்” என்று ரோஹித் தெரிவித்தார்.

ஷமி கடைசியாக உலகக் கோப்பையில் விளையாடி இருந்தார். 7 போட்டிகளில் 10.70 சராசரியிலும், 12.20 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். உலகக் கோப்பையின் போது வலியை தாங்கிக்கொண்டு அணிக்காக விளையாடி இருந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில் லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் ஷமி. அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அந்த தொடரில் ஷமி இருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும். ஆனால் தற்போது மீண்டும் காயம் அடைந்துள்ளதால் அணிக்கு பின்னடைவு ஆகி உள்ளது. முழு உடல் தகுதி இல்லாதபோது ஷமியை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வது நல்லது இல்லை என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

“ஷமி தற்போது NCAல் உள்ளார். அவரை பிசியோக்கள் மற்றும் NCA மருத்துவர்கள் கூர்ந்து கண்காணித்து வருகின்றனர். அவர் விரைவில் 100% குணமாக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். குணமடையாத ஷமியை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து சொல்ல நாங்கள் விரும்பவில்லை. அது சரியான முடிவாக இருக்காது. ஷமி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த கிரிக்கெட்டிலும் பங்கேற்கவில்லை. ஒரு வேகப்பந்து வீச்சாளர் இவ்வளவு காலம் ஓய்வில் இருந்து மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அது மிகவும் கடினமானது. அவருக்கு போதுமான அவகாசம் கொடுக்க விரும்புகிறோம். மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு முன்பு சில உள்ளூர் போட்டிகளில் பங்கேற்பார். அதன் பிறகு முடிவு எடுக்கப்படும்” என்று ரோஹித் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.