`ரூ.1 கோடி முதலீடு; ரூ.28 கோடி லாபம்' – மோசடிசெய்த வங்கி மேலாளர் & டீம் – சிக்கியது எப்படி?

‘ஷேர் மார்க்கெட், ஸ்டாக் மார்க்கெட், ஷேர்ஸ்…’ என பங்குச்சந்தை சம்பந்தமான எந்தவொரு வார்த்தையையும் கூகுள், யூடியூப் என எதில் தேடி இருந்தாலும் போதும்…அடுத்த சில நாட்களில் நம் வாட்ஸ் அப்பில் ஷேர் மார்க்கெட் குரூப் ஒன்று முளைத்துவிடும். அந்த குரூப்பில் ‘பங்குச்சந்தையில் முதலீடு செய்ய 10 டிப்ஸ்’, ‘இந்த ஷேரில் முதலீடு செய்யுங்க’ என ஏகப்பட்ட மெசேஜ்கள் வந்து சேரும்.

இப்படியான ஒரு மெசேஜ் ஸ்கேம் செய்த பெங்களூரில் உள்ள தனியார் வங்கியை சேர்ந்த மேனேஜர் உள்ளிட்ட பலரை கைது செய்துள்ளது பெங்களூரு போலீஸ்.

இப்படியான ஒரு மெசேஜ் ஸ்கேம்…

சில மாதங்களுக்கு முன்பு, பெங்களூரை சேர்ந்த ஒருவரின் வாட்ஸ்அப்பில் பங்குச்சந்தை சம்பந்தமான வாட்ஸ்அப் குழு ஒன்று வந்துள்ளது. அதில் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் 10 மடங்கு அதிக லாபம் பெறலாம் என்பதுபோல பல மெசேஜ்கள் வந்துள்ளது.

இவரும் அந்த மெசேஜ்களை நம்பி, முதன்முதலில் ரூ.50,000-த்தை முதலீடு செய்துள்ளார். அந்த தொகை பல மடங்கு அதிகரித்துள்ளதாக வாட்ஸ்அப் மெசேஜ் வந்துள்ளது.

‘அது தான் காசு பெருகிவிட்டதே’ என்று இவர், கடந்த ஜூன் மாதம் ரூ.1.5 கோடி முதலீடு செய்துள்ளார். இந்த தொகை ரூ.28 கோடியாக அதிகரித்துள்ளதாக எடிட் செய்யப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டுகளை அனுப்பியுள்ளார்கள் மோசடி பேர்வழிகள்.

இந்த காசை பெறுவதற்காக பேசும்போது, ‘சர்வர் மேனேஜ்மெண்ட் தொகையாக’ ரூ.75 லட்சத்தை கட்டினால் தான், ரூ.28 கோடியை பெற முடியும் என்று பேசியிருக்கிறார்கள். இதனால் சந்தேகம் அடைந்த அந்த நபர் சைபர் கிரைமில் புகாரளித்துள்ளார்.

இந்த புகாரை விசாரிக்கும்போது, பல மோசடி வங்கி கணக்குகளை கடந்து இரு தனியார் வங்கி கணக்குகளுக்கு போய் பணம் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வங்கி கணக்கை தொடங்கியவர்கள் எந்தவொரு சரியான ஆவணங்களும் கொடுக்காமல் வங்கி கணக்கை தொடங்கியுள்ளார்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பல போலி வங்கி கணக்குகளை கடந்து…

மேலும், இதே மாதிரி 6 கணக்குகள் தொடங்கப்பட்டு, ரூ.97 கோடி பண பரிமாற்றம் அந்த கணக்குகளில் நடந்துள்ளது. போலி கணக்குகள், பண பரிமாற்றம் ஆகியவற்றை விசாரித்துக்கொண்டே போகும்போது, இந்த மோசடியில் பெங்களூரில் உள்ள தனியார் வங்கி மேனேஜர் மற்றும் மூன்று விற்பனை அதிகாரிகள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவர்கள் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர்.

பின்னர், மேலும் விசாரணையை தொடர்கையில், அடுத்த சில நாட்களிலேயே நான்கு பேர் இதே மோசடியில் கைது ஆகியுள்ளனர்.

இதே பேட்டர்னில் பணத்தை ஏமாந்த வழக்குகள் இந்தியா முழுவதும் 254 வழக்குகள் உள்ளன. இந்த மோசடியில் இன்னும் 9 பேருக்கு தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்கள் வெளிநாடுகளில் கூட பதுங்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

‘பேராசை பெரு நஷ்டம்’ என்ற பழமொழி நியாபகம் இருக்கிறதா மக்களே…யாராவது ஒருவர் ‘பணம் கொடுங்கள்…பல மடங்கு ஆக்கி தருகிறேன்’ என்று கூறினால் நம்பவே நம்பாதீர்கள். உஷார் மக்களே!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.