“ரூ.4,000 கோடியில் நடந்த மழைநீர் வடிகால் பணிகளின் நிலை என்ன?” – தமிழிசை கேள்வி

சென்னை: “ரூ.4 ஆயிரம் கோடியில் நடைபெற்ற மழைநீர் வடிகால் பணிகள் எத்தனை சதவீதம் நிறைவடைந்துள்ளது?” என தமிழக அரசுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் பகுதிகளில் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக சார்பில், தனியார் மருத்துவமனையுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம் இன்று (அக்.16) நடத்தப்பட்டது. இதில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு, பொது மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “பாஜக தொண்டர்கள் அனைவரும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வுகளை விட்டுவிட்டு, இந்த நேரத்தில் பொதுமக்களுக்காக பணியாற்ற வேண்டும். குறிப்பாக, சமூக வலைதளங்களில் பொதுமக்களிடம் இருந்து எந்த மாதிரியான உதவிகள் தேவைப்படுகிறது என்ற கோரிக்கை வருகிறதோ, அதற்கு பாஜக சார்பில் நேரடியாகச் சென்று அவர்களுக்கு உதவி செய்யப்பட்டு வருகிறது.

மக்கள் இந்த நேரத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தற்போது பெய்திருப்பது அக்டோபர் மழைதான். டிசம்பரில் இதைவிட அதிகமாக பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மழைக் காலத்தில் மற்ற கட்சியினரே களத்தில் இறங்கி பணியாற்றும்போது, ஆளும் கட்சிகள் களத்தில் இறங்கி பணியாற்றுவது அவர்களது கடமை. ஆனால், ஆளும் கட்சியைச் சார்ந்த துணை முதல்வர் களத்துக்கு வருவதே அரிதான காரியம் போல முன்னிறுத்துவது சரியல்ல. ஆட்சியாளர்களுக்கு மக்களை காப்பது கடமை.

தற்போது அதிகளவில் தண்ணீர் தேங்கவில்லை என்பது மகிழ்ச்சி. ரூ.4 ஆயிரம் கோடியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணி எத்தனை சதவீதம் நிறைவடைந்துள்ளது என்ற தகவல் மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை. மழை வெள்ளம் வந்தால், சென்னை எந்தளவுக்கு பாதுகாக்கப்படும் என்று திருப்புகழ் அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கை எந்தளவுக்கு பரிசீலிக்கப்பட்டது? அது நடைமுறைப்படுத்தப்பட்டதா? அதற்கான தொலை நோக்குத் திட்டம் வகுக்கப்பட்டதா என்ற தகவலும் மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்தும்போது, காவல் துறை அபராதம் விதித்தது. எங்களை போன்றோர் குரல் கொடுத்ததால், அபராதம் விதிப்பது ரத்து செய்யப்பட்டது. ஆனால், தற்போது, வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்த, அரசே ஏற்பாடு செய்து கொடுத்தது போல தோற்றத்தை திமுகவினர் ஏற்படுத்தியுள்ளனர். கார் காலம் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், கார் பாலம் இப்போது தான் கேள்விப்படுகிறேன். மத்திய அரசு திட்டத்திலும் திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள் என்றால், மக்களே ஒரு திட்டத்தை ஏற்படுத்தினால், அதிலும் அவர்கள் ஸ்டிக்கர் ஒட்டுகிறார்கள்” என்று தமிழிசை கூறினார்.

இதனிடையே, “ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, நாங்கள் ஆட்சிக்கு வந்தபோதே, அதற்கான பணிகளில் இறங்கினோம். அந்தக் குழுவின் பரிந்துரைப்படி பணிகளை கொஞ்ச, கெஞ்சமாக செய்து வருகிறோம். ஒரே அடியாக அவற்றை செய்து முடிக்க முடியாது. அந்த பணிகள் ஓரளவு முடிந்திருக்கிறது. இன்னும் 25 முதல் 30 சதவீதம் பணிகள் பாக்கி இருக்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. வரக்கூடிய காலக்கட்டத்தில், அதையும் முடித்துவிடவோம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். | அதன் விவரம்: “சென்னையில் 30% மழைநீர் வடிகால் பணிகள் எஞ்சியுள்ளது; விரைவில் அதையும் முடிப்போம்” – முதல்வர் ஸ்டாலின்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.