புதுடெல்லி: பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலைவராக நயாப் சிங் சைனி இன்று தேர்வு செய்யப்பட்டார். அவர், நாளை (அக். 17) முதல்வராக பதவியேற்க உள்ளார்.
ஹரியானாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் பஞ்ச்குலாவில் நடைபெற்றது. இதில், கட்சியின் மத்திய பார்வையாளர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர். மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், ஹரியானாவின் பாஜக தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான், மாநில இணைப் பொறுப்பாளர் பிப்லாப் தேப் ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, “பாஜக சட்டமன்றக் கட்சியின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஒருமனதாக ஒரு முன்மொழிவு பெறப்பட்டது. கிரிஷன் பேடி மற்றும் அனில் விஜ் ஆகியோர் இதனை முன்மொழிந்தனர். அவர்கள், சட்டமன்றக் கட்சியின் தலைவராக முன்னாள் முதல்வர் நயாப் சிங் சைனியின் பெயரைப் பரிந்துரை செய்தனர். நயாப் சிங் சைனியை பாஜக சட்டமன்றக் கட்சியின் தலைவராக நான் அறிவிக்கிறேன்.” என்று கூறினார்.
ஹரியானா பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நயாப் சிங் சைனி, நாளை முதல்வராக பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாக தேர்வாகி உள்ளது.
நாளை நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.