2047-ல் பிரதமர் மோடியின் 'வளர்ச்சியடைந்த பாரதம்' போதை, பயங்கரவாதம் இல்லாத நாடாக இருக்கும் – அமித்ஷா

புதுடெல்லி,

பிரதமர் மோடியின் இலக்கான ‘விக்சித் பாரத்'(வளர்ச்சியடைந்த பாரதம்) மக்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு பாதுகாப்பு வழங்க கூடியதாகவும், போதை மற்றும் பயங்கரவாதம் இல்லாத நாடாகவும் இருக்கும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் ஐ.பி.எஸ். பயிற்சியை நிறைவு செய்த, 2023-ம் ஆண்டு தொகுதியைச் சேர்ந்த 188 பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடியபோது அமித்ஷா கூறியதாவது;-

“பயிற்சியை நிறைவு செய்யும் ஐ.பி.எஸ். அதிகாரிகள், பணிக்காலத்தின்போது தங்களது பயிற்சி காலத்தை நினைவில் கொள்ள வேண்டும். உங்களுக்கு முந்தைய 75 தொகுதிகளைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகளை விட, உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக இருக்கும்.

நமது நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த ஏராளமான முயற்சிகளை செய்திருக்கிறோம். ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு பகுதிகள் மற்றும் தீவிர இடதுசாரி பயங்கரவாதம் உள்ள பகுதிகளில் தற்போது வன்முறைகள் 70 சதவீதம் குறைந்துள்ளன. இந்த இடங்களில் இந்தியாவின் பாதுகாப்பு அமைப்புகள் முழு பலத்துடன் இருக்கின்றன.

தற்போது, மக்களின் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்க காவல்துறை முன்வர வேண்டிய நேரம் வந்துவிட்டது. குற்றங்கள் நடைபெறுவதை குறைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நீதி வழங்கிடவும் காவல்துறை விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.

2047-ல் பிரதமர் மோடியின் இலக்கான ‘விக்சித் பாரத்'(வளர்ச்சியடைந்த பாரதம்) மக்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு பாதுகாப்பு வழங்க கூடியதாகவும், போதை மற்றும் பயங்கரவாதம் இல்லாத நாடாகவும் இருக்கும். இந்த நாட்டின் பிரதமருக்கும், நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் ஒரே மாதிரியான உரிமைகளை நமது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ளது. அந்த உரிமைகளை பாதுகாக்கும் பொறுப்பு காவல்துறையினருக்கு உள்ளது.”

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.