ராய்ப்பூர்: மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சத்தீஸ்கரைச் சேர்ந்த சிறுவனை மும்பை போலீஸார் கைது செய்தனர். நண்பன் பெயரில் போலி கணக்கு தொடங்கி அந்த சிறுவன் இந்த மிரட்டல்களை விடுத்தது தெரியவந்தது.
கடந்த திங்கள் கிழமை (அக்.14) அன்று எக்ஸ் சமூகவலைதள கணக்கு ஒன்றில் மர்ம நபர் ஒருவர் வெவ்வேறு ஏர்லைன்களுக்கு சொந்தமான மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து பதிவுகளை வெளியிட்டு வந்தார். அந்த பக்கத்தில் பலரும் மும்பை போலீஸாரை டேக் செய்து கவனத்துக்கு கொண்டு வந்தனர். இந்த மிரட்டல்கள் காரணமாக இரண்டு விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. அதில் மும்பையில் இருந்து நியூயார்க் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று புதுடெல்லிக்கு திருப்பிவிடப்பட்டது. மற்றொரு விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல்கள் குறித்து விசாரணையில் அந்த எக்ஸ் பக்கத்துக்கு சொந்தமான நபர் சத்தீஸ்கரில் இருப்பதை போலீஸார் தெரிந்துகொண்டனர். இதன் அடிப்படையில் அங்கு விரைந்த போலீஸார், சத்தீஸ்கரின் ராஜ்நந்த்கான் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த சிறுவனுக்கும் அவருடைய நண்பனுக்கும் இடையே பணம் தொடர்பாக நடந்த தகராறில் ஆத்திரமடைந்த அந்த சிறுவன், தனது நண்பன் பெயர் மற்றும் புகைப்படத்துடன் போலி எக்ஸ் கணக்கு தொடங்கி, விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது தெரியவந்தது.
தன்னுடைய நண்பனை போலீசில் சிக்கவைக்கவே இவ்வாறு செய்ததாக அந்த சிறுவன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். கடந்த திங்கள் முதல் இதுவரை மொத்தம் 19 மிரட்டல் பதிவுகள் அந்த கணக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் சிறுவனின் தந்தைக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர். சிறுவனின் வயது மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவருடைய பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை.