புதுடெல்லி: பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு 45 சதவீதம்வரை இருக்கக்கூடிய மாணவர் ஒருவர் தனக்கு மருத்துவப் பட்டப்படிப்புக்கான இடம் மறுக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில் கூறியதாவது: உடல் ரீதியான குறைபாடு 44 முதல் 45 சதவீதம்வரை இருக்கும் ஒரே காரணத்துக்காக மாணவர் ஒருவருக்கு எம்பிபிஎஸ் சீட் மறுக்கப்படுவதா? இதை காரணம் காட்டி மருத்துவப் பட்டப்படிப்பில் சேரும் உரிமை பறிக்கப்படுவதை இந்த நீதிமன்றம் ஏற்காது.
சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்கிற உறுதியளிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14-ஐ இது மறைமுகமாகமீறுவதாகிவிடும். மாற்றுத்திறனாளி என்பதற்காக மாணவர் சேர்க்கையை நிராகரிக்காமல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகே முடிவெடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட மாணவர் தொடர்பாக மருத்துவ வாரியம் வெளியிட்ட அறிக்கை அவருக்கு சாதகமாகவே உள்ளது. ஆகையால் இனிவரும் காலங்களில் தேசிய மருத்துவ ஆணையம், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைக் கையாண்டு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் இடமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.