க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு பெயர்போனவர் நடிகர் வெற்றி.
`8 தோட்டாக்கள்’, `ஜீவி’ போன்ற த்ரில்லர் படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் தற்போது லவ் ஸ்டோரி பக்கமும் களமிறங்கியிருக்கிறார். ஆம் இந்த வாரம் இவர் நடித்திருக்கும் `ஆலன்’ என்ற காதல் திரைப்படம் வெளியாகிறது. இந்தப் படத்திற்காக அவரை சந்தித்துப் பேசினோம். க்ரைம் திரில்லர் படங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடிப்பதற்கான காரணம், அதனுடைய வணிகரீதியான வெற்றி என நீண்டது அந்த உரையாடல்….
`ஆலன்’ எப்படியான திரைப்படம்?
இது ஒரு காதல் திரைப்படம்தான். நம்ம ஆட்டோகிராப், பிரேமம் மாதிரியான படங்கள் பார்த்திருப்போம். அது மாதிரியான ஒரு பயோகிராஃபிதான் `ஆலன்’. இது ஒரு எழுத்தாளருடைய பயோகிராஃபி. அவருடைய 15 வயதுல இருந்து 40 வயது வரைக்கும் நடக்கிற கதைதான் `ஆலன்’. நான் `பம்பர்’ திரைப்படம் பண்ணும்போதுதான் இந்த படம் என்கிட்ட வந்துச்சு. இந்த படத்தோட கதையை முதல்ல சொல்லல. அதற்கு பதிலாக இயக்குநர் ஸ்கிரிப்ட் புத்தகத்தை கொடுத்துட்டார். அதை படிச்சதும் நாவல் படிச்சது மாதிரி இருந்தது. இந்த படத்துக்கு அதிக லொகேஷன்ஸ் தேவைப்பட்டது. அதுமட்டுமல்ல காதல் படங்களுக்கு முதல் முக்கிய தேவையான இசையும் இந்த படத்துக்கு வலுவாக இருக்கணும். இந்த படத்தோட இயக்குநர் தான் தயாரிப்பாளரும். அவர் கதையோட தன்மைக்கு தேவையான விஷயங்கள்ல எந்த சமரசமும் பண்ணிகல. காசி, ரிஷிகேஷ், கொடைக்கானல், பாண்டிச்சேரி, ராமேஷ்வரம், ஜெர்மனி போன்ற பல பகுதிகள்ல இந்த படத்தோட படப்பிடிப்பு நடந்துச்சு. இத்தனை பகுதிகள்ல படப்பிடிப்பை நடத்தி 40 நாள்ல முடிச்சிட்டோம். இந்த படத்துல ஒரு ஜெர்மன் நடிகை நடிச்சிருக்காங்க. அவங்க ஜெர்மனில ஒரு தமிழ் பேராசிரியர். ஒரு எழுத்தாளருடைய பக்கத்தை இதுவரைக்கும் தமிழ் சினிமாவுல பெரியளவுல பேசல. `ஆலன்’ அந்த பக்கங்களையும் அலசும். எப்போதும் என்கிட்ட பலர், ` ஏன், க்ரைம் திரில்லர் படமாகவே பண்றீங்க’னு கேட்பாங்க. இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஃபீல் குட் கதை. மக்களுக்கும் இந்த கதை பிடிக்கும்.
வெற்றி நடிக்கிற படத்துல கன்டென்ட் வலுவாக இருக்கும்னு மக்களுக்கு ஒரு நம்பிக்கை வந்திருச்சு. இந்த கமென்ட்ஸ் உங்களுக்கு பூஸ்ட் கொடுக்குதா? அல்லது `நம்ம பக்கம் முக்கியமான கவனம் திரும்புதே’னு பிரஷர் ஆகுதா?
மக்களுடைய கவனம் கிடைக்கிறது கண்டிப்பாக ஒரு பூஸ்ட்தான். இப்படி மக்கள் தொடர்ந்து பார்க்கும்போது நமக்கும் பொறுப்புகள் அதிகமாகும். அடுத்த படம் இன்னும் நல்லதாக கொடுக்கணும்னு வர்ற பயத்தை நான் ஆரோக்கியமாகதான் பார்க்கிறேன். ஓ.டி.டில என்னுடைய படங்களுக்கான பிசினஸ் ரொம்பவே நல்லா இருக்கு. என்னுடைய சில படங்கள்தான் தியேட்டர்ல பார்க்கிறாங்க. சில திரைப்படங்களை மக்கள் ஓ.டி.டி-யிலதான் பார்க்கிறாங்க. சின்ன திரைப்படங்களுக்கு ஓ.டி.டி மிகப் பெரிய உதவியாக இருக்கு.
படத்துல சரி, நிஜத்திலையும் சரி ரொம்பவே அமைதியாக இருக்கீங்க! கலகலப்பான கதாபாத்திரங்களை தேர்வு பண்ணி நடிக்கணும்னு ஆசை இருக்கா?
ஆமா, அப்படி ஒரு படமும் நான் கமிட்டாகியிருக்கேன். ஜனவரி மாதத்துல அதற்கான வேலைகளையும் ஆரம்பிக்குறோம். மக்கள் இந்த விமர்சனத்தை வெளிப்படையாக சொல்றதை நான் நல்லதாக பார்க்கிறேன். என்னுடைய `8 தோட்டாக்கள்’, `ஜீவி’ படத்துல என்னுடைய கதாபாத்திரம் வேற மாதிரி இருக்கும். அதுவே `பம்பர்’ படத்துல வேற மாதிரி இருக்கும். நடிகருக்கு இந்த பன்முகத்தன்மை நிச்சயமாக தேவையானது.
க்ரைம் த்ரில்லர் படங்கள்தான் வெற்றி அதிகமாக பண்றார்னு பதிவானதும் உங்களுக்கு எப்படியான கதைகள் வருது?
எனக்கு `ஜீவி’ படத்துக்குப் பிறகு `கேர் ஆஃப் காதல்’னு ஒரு லவ் படத்தோட கதைதான் வந்தது. அது ஒரு தெலுங்கு படத்தோட ரீமேக். இந்த படம் தியேட்டர்ல சரியாக போகல. ஆனா, ஓ.டி.டி தளத்துல இந்த படத்துக்கு நல்ல ஒரு வரவேற்பு கிடைச்சது. இன்னும் பெரிய இயக்குநர்கள்கூட படம் பண்ணல. அவங்க என்னுடைய படம் பார்க்கலையா? அவங்களோட அசிஸ்டன்ட்ஸ் என்னை பற்றி நெகடிவ்வாக சொல்றாங்களானு தெரில. ஆனால், இப்போ நான் ரெண்டு பெரிய ப்ராஜெக்ட்ஸ் சைன் பண்ணியிருக்கேன். ஒரு ப்ராஜெக்ட் பற்றி வெளிப்படையாக இப்போ சொல்லமுடியாது. அடுத்தது, நானும் பிரபு தேவா மாஸ்டரும் இணைஞ்சு ஒரு வெப் சீரிஸ்ல நடிச்சிட்டு இருக்கோம். நான் எல்லா தமிழ் படங்களையும் பார்த்திடுவேன். ஒரு ஸ்கிரிப்ட் படிக்கும்போது நம்ம பார்த்த படங்கள்ல இருந்து எந்த வகையில இந்த கதை வேறுபட்டு இருக்குனு முதல்ல பார்ப்பேன். அடுத்ததாக, என்னை அயர்ச்சி அடைய வைக்காமல் முழுமையாக அந்த கதை நகர்த்திக் கொண்டு போனால் கண்டிப்பாக நான் அதோட இயக்குநரை அழைத்து பேசிடுவேன்.
த்ரில்லர் படங்கள்தான் அதிகமாக உங்களை ஈர்த்திருக்கிறதா?
இல்ல. அப்படியான படங்கள் தொடர்ந்து பண்றதுனால மக்கள் அப்படி நினைச்சிடுறாங்க. அது சரியானது கிடையாது. நான் பொதுவாக காமெடி படங்கள்தான் அதிகமாக விரும்பி பார்ப்பேன். `பஞ்சதந்திரம்’ திரைப்படம்தான் என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட். முன்னாடிதான் அதிகமான த்ரில்லர் கதைகள் வந்தது. இப்போ `பம்பர்’ திரைப்படத்துக்குப் பிறகு நல்ல ஒரு வேறுபாடு தெரியுது. ரொமான்டிக் – காமெடி படங்கள், ஃபேமிலி படங்கள்லாம் இப்போ பண்றேன்.
ஒரு நல்ல படம் மக்களுக்கு கொடுத்திட்டோம்னு ஒரு திருப்தி இருந்தாலும் அந்த படங்களோட வணிகரீதியான வெற்றியை பற்றி யோசிக்க வைக்குதா?
கண்டிப்பாக அந்த யோசனை வரும்தான். ஒரு நல்ல கண்டென்ட் பண்ணும்போது இயக்குநருக்கு நல்ல பெயர் கிடைக்கும். ஆனா, தயாரிப்பாளருக்கு அந்த சமயத்துல பணம் வந்திருக்காது. அப்படியான படங்கள் ஓடினால்தான் அந்த இயக்குநருக்கும் அந்த நடிகருக்கும் அடுத்த படம் கிடைக்கும். அது இல்லாததுதான் வருத்தமடைய வைக்குது. ஒரு படம் வந்த நேரத்துல வெற்றியடையாமல் 10 வருஷம் கழிச்சு நல்ல திரைப்படம்னு பேசும்போது அந்த தயாரிப்பாளர் அந்த படத்துக்கு கடன் அடைச்சுட்டு இருப்பாரு.
யாருடைய கமெட்டின்ஸ் உங்களை தொடர்ந்து சினிமாவுல நகர்த்திக் கொண்டுபோகுது?
`உன்னுடைய கண் ரொம்ப பவர் புல்லாக இருக்கு. அதை நல்லா பயன்படுத்தலாம். தொடர்ந்து நல்ல படங்கள் பண்ணு’ னு சமீபத்துல சீனு ராமசாமி சார் சொன்னார். அது எனக்கு ரொம்பவே ஊக்கத்தை கொடுத்தது. `8 தோட்டாக்கள்’ சமயத்துல சூப்பர் ஸ்டார் ரஜினி சார் பாராட்டினார். இந்த விஷயங்களெல்லாம்தான் எனக்கு மோடிவேஷனாக அமைஞ்சது . இந்த மாதிரி தேவையான கமென்ட்ஸை மட்டும்தான் நான் எடுத்துக்குவேன்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…