இஸ்ரேலுக்கு சக்திவாய்ந்த 'தாட்' ஏவுகணை தடுப்பு அமைப்பை அனுப்பியது அமெரிக்கா

இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஓராண்டைக் கடந்து நீடிக்கும் நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் கடந்த 1-ம் தேதி நடத்திய ஏவுகணை தாக்குதல் பிராந்திய பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. ஈரானுக்கு இஸ்ரேல் இதுவரை பதிலடி கொடுக்கவில்லை. எனினும், விரைவில் தாக்குதல் நடத்தலாம் என தெரிகிறது. பதிலடி மரண அடியாகவும், ஆச்சரியம் அளிப்பதாகவும் இருக்கும் என இஸ்ரேல் பாதுகாப்புத்துறை மந்திரி யோவ் காலண்ட் கூறியிருந்தார். அதேசமயம், இஸ்ரேல் பதில் தாக்குல் நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என ஈரானும் மிரட்டியிருக்கிறது.

இந்த நிலையில், ஈரானின் அச்சுறுத்தலை சமாளிக்க இஸ்ரேலுக்கு அதிநவீன ‘தாட்’ என்னும் அதிநவீன ஏவுகணை தடுப்பு அமைப்பினை (வான் பாதுகாப்பு அமைப்பு) அமெரிக்கா அனுப்பி உள்ளது. அதனை இயக்குவதற்கு 100 அமெரிக்க வீரர்களும் இஸ்ரேல் செல்கின்றனர். இத்தகவலை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது. ஈரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து ‘தாட்’ வான் பாதுகாப்பு அமைப்பு, இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மேம்படுத்தும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

“இஸ்ரேலை பாதுகாப்பதே அமெரிக்காவின் இலக்கு” என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டிருந்தார். எனவே, 1-ம் தேதி இஸ்ரேல் மீது ஏவப்பட்ட 180-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் உட்பட ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, தாட் வான் பாதுகாப்பு அமைப்பை அனுப்புவதற்கு அமெரிக்கா முன்வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் மூலமாக இஸ்ரேலில் அமெரிக்கா தனது படைகளையும் களமிறக்க உள்ளது. எனவே இந்த நடவடிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இஸ்ரேலில் ஏற்கனவே சிறிய எண்ணிக்கையிலான அமெரிக்க படைகள் உள்ளன. ஆனால் இந்த முறை சுமார் 100 துருப்புகள் தாட் அமைப்புடன் நிலைநிறுத்தப்பட உள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விரிவடைந்து வரும் போரில் அமெரிக்காவின் ஈடுபாடு அதிகரித்து வருவதை இது காட்டுகிறது.

தாட் அமைப்பை இயக்குவதற்கு தேவையான ஒரு குழுவினர் மற்றும் சில பாகங்கள் இஸ்ரேலுக்கு வந்தடைந்ததாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்தது. மேலும் வீரர்கள் மற்றும் பிற பாகங்கள் வரும் நாட்களில் அனுப்பப்பட உள்ளதாகவும், தாட் அமைப்பு விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என்றும் கூறியிருக்கிறது.

தாட் அமைப்பானது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீழ்த்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. தாட்’ வான் பாதுகாப்பு அமைப்பில் ரேடார், கட்டுப்பாட்டு அறை, ஏவுகணைகள் பொருத்தப்பட்ட கவச வாகனம் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும். எதிரிகளின் ஏவுகணைகளை ரேடார் கண்காணித்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும். கட்டுப்பாட்டு அறையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவின்படி கவச வாகனத்தில் இருந்து ஏவுகணைகள் சீறிப் பாய்ந்து எதிரிகளின் ஏவுகணைகளை நடு வானில் இடைமறித்து அழிக்கும். தாட் கவச வாகனத்தில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் சுமார் 200 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.