டெல்அவிவ்: காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் உயிரிழந்தது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
காசாவில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக வியாழக்கிழமை (அக்.17) மூன்று முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரும் ஒருவராக இருக்கலாம் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்தது. கொல்லப்பட்ட மூவரின் உடல்களும் டிஎன்ஏ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவுகள் கிடைத்தபிறகே பயங்கரவாதிகள் குறித்த தகவல்களை உறுதி செய்ய முடியும் என்று கூறியிருந்தது.
இந்த நிலையில், டிஎன்ஏ பரிசோதனையில் கொல்லப்பட்ட மூவரில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரும் ஒருவர் என்று தெரியவந்துள்ளது. இறந்தவரின் பற்கள், கைரேகை இரண்டும் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், அவை ஹமாஸ் தலைவர் யஹ்யாவின் டிஎன்ஏ உடன் சந்தேகத்துக்கு இடமின்றி ஒத்துப் போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “தீயசக்திகளுக்கு கிடைத்த பலத்த அடி” என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இது இஸ்ரேலுக்கு ஒரு நல்ல நாள்’ என்று கூறியுள்ளார். அமெரிக்க துணை அதிபரும், ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸ், “யஹ்யாவின் கொல்லப்பட்டதன் மூலம் காசாவில் போர்நிறுத்தம் எற்படும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டாக யஹ்யா சின்வர் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை. அவர் குறித்த தகவல்களும் வெளியாகவில்லை என இஸ்ரேல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் யஹ்யா கொல்லப்பட்டது எதேச்சையான நிகழ்வுதான் என்றும், இது உளவுத் துறை அளித்த தகவலின்படி நடந்த தாக்குதல் அல்ல என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
80-களில் ஹமாஸ் இயக்கத்தில் சேர்ந்த யஹ்யா, அதன் ராணுவப் பிரிவில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வந்தார். கடந்த ஜூலையில் ஹமாஸ் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே டெஹ்ரானில் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டபிறகு ஹமாஸின் புதிய தலைவராக யஹ்யா பொறுப்பேற்றுக் கொண்டார்.