“எல்லாம் ஐயப்பன் அருள்… பல ஆண்டு ஆசை நிறைவேறி உள்ளது'' சபரிமலை புதிய மேல்சாந்தி நெகிழ்ச்சி!

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. வரும் 21-ம் தேதி இரவு வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 30 -ம் தேதி மாலையில் சபரிமலை நடை திறக்கிறது 31-ம் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அந்த இரு தினங்களும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் மண்டல மகர விளக்கு கால பூஜைகளுக்காக நவம்பர் மாதம் 15-ம் தேதி மாலை சபரிமலை நடை திறக்கிறது. அதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று தொடங்கியது. மண்டல, மகரவிளக்கு கால பூஜை நாட்களில் ஆன்லைன் மூலமாக ஒரு நாள் 80 ஆயிரம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என முதலில் அறிவிக்கப்பட்டது. அதே நேரம் நேரடியாகச் சென்று ஸ்பாட் புக்கிங் செய்யும் வசதி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டடு. ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்பட்டதற்கு பக்தர்களும், இந்து அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து ஸ்பாட் புக்கிங் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒருநாள் 70 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சபரிமலை புதிய மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலுக்கும், மாளிகப்புறம் சன்னதிக்கும் ஒவ்வொரு ஆண்டும் புதிய மேல்சாந்திகள் தேர்வு செய்வது வழக்கம். மண்டலகால மகரவிளக்கு பூஜை தொடக்க நாளில் புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்றுக்கொள்வார்கள். மண்டலகால மகரவிளக்கு பூஜைகள் அடுத்த மாதம் தொடங்குவதை ஒட்டி சபரிமலை புதிய மேல்சாந்தி தேர்வு இன்று நடைபெற்றது.

ஐயப்ப சுவாமி கோயில் மேல்சாந்திக்காக மொத்தம் 24 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் பெயர்கள் எழுதப்பட்ட சீட்டுக்கள் ஒரு வெள்ளிக்குடத்தில் போடப்பட்டன. மற்றொரு வெள்ளிக்குடத்தில் 23 வெள்ளை துண்டுச்சீட்டுகளும், ஒருச்சீட்டில் மேல்சாந்தி என எழுதப்பட்டும் போடப்பட்டன. பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்த ரிஷிகேஷ் துண்டுச்சீட்டுகளை குடத்தில் இருந்து எடுத்தார். அதில் 16-வதாக எடுத்த சீட்டில் சபரிமலை ஐயப்பசுவாமி கோயில் மேல்சாந்தியாக கொல்லம் சக்திகுளங்கரையைச் சேர்ந்த அருண்குமார் நம்பூதிரியின் பெயர் தேர்வு ஆனது. அருண்குமார் நம்பூதிரி பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் முன்னாள் மேல்சாந்தி ஆவார். தற்போது கொல்லம் லட்சுமி நட கோயில் மேல்சாந்தியாக உள்ளார்.

ஐப்பசி மாத பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டதால் சபரிமலையில் குவிந்துள்ள பக்தர்கள்

மாளிகப்புறம் மேல்சாந்திக்காக 15 பேர் விண்ணப்பித்திருந்தனர். பந்தளம் ராஜகுடும்பத்தைச் சேர்ந்த சிறுமி வைஷ்ணவி சீட்டுக்களை தேர்வு செய்தார். அதில் கோழிக்கோட்டைச் சேர்ந்த வாசுதேவன் மாளிகப்புறம் புதிய மேல்சாந்தியாக தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். ஐயப்ப சுவாமி கோயில் மற்றும் மாளிகப்புறம் மேல்சாந்திகளாக இவர்கள் ஓராண்டுக்கு நீடிப்பார்கள். நவம்பர் மாதம் 15-ம் தேதி புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கின்றனர். சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் மேல்சாந்தியாக தேர்வான அருண்குமார் கூறுகையில், “எல்லாம் ஐய்யப்ப சுவாமியின் அருள். மிகவும் சந்தோஷமாக உள்ளது. பல ஆண்டுகளாக இருந்த எனது ஆசை நிறைவேறியுள்ளது” என்றார்.

தேர்வு செய்யப்பட்ட புதிய மேல்சாந்திகள் ஓராண்டுக்கு மேல்சாந்திகளாக இருப்பார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.