சென்னை: சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நாட்டுப்பற்றும், தியாகமும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும் என்று அவரது நினைவு தினத்தில் ஆளுநர், முதல்வர், தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 225-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலைஅணிவிக்கப்பட்டு அதன் அருகே, அவரது உருவப் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. கட்டபொம்மன் படத்துக்கு தமிழக அரசு சார்பில்அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., தமிழ் வளர்ச்சி துறை செயலர் வே.ராஜாராமன், செய்தி துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தலைவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: இந்தியாவின் வீர மைந்தன் வீரபாண்டிய கட்டபொம்மனை அவரது உயிர்த்தியாக தினத்தில் தேசம் பெருமையுடன் நினைவுகூர்கிறது. ஆங்கில படைகளுக்கு எதிராக மக்களை அச்சமின்றி வழிநடத்தியவர். வரலாற்று சிறப்புமிக்க பாஞ்சாலங்குறிச்சி போர் அவரது ஒப்பற்ற துணிச்சல், தைரியத்துக்கு சான்று.அவரது வீர தியாகங்கள், அழிவில்லா நாட்டுப்பற்று நமது பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும்.
முதல்வர் ஸ்டாலின்: ஆங்கில ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் தோன்றிய புரட்சி சுடர் கட்டபொம்மனின் நினைவு நாள். அந்நியர் ஆதிக்கம் பொறுக்காமல், நெஞ்சை நிமிர்த்தி போரிட்ட அவரது புகழ், தென்னாட்டின் வீரம் செறிந்த வரலாற்று பக்கங்களில் எந்நாளும் ஒளிவீசும்.
முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்து, தன் இன்னுயிரை நாட்டுக்காக தியாகம் செய்த மாவீரர் கட்டபொம்மன் நினைவு நாளில் அவரது வீரம்,தியாகத்தை போற்றி வணங்குகிறேன்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: ஆங்கிலேயரின் அடக்குமுறைகளை எதிர்த்து, நாட்டின் விடுதலைக்காக போராடி அனைவரது நெஞ்சங்களிலும் விடுதலை வேட்கையை விதைத்தவர். தூக்குமேடை ஏறியபோதும் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு அடிபணியாமல், வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த மாமன்னர் கட்டபொம்மனின் நினைவுநாளில் அவரது புகழை போற்று வணங்குகிறேன்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: சுதந்திர போராட்டத்தில் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக பாளையக்காரர்களை அணிதிரட்டி, தன்னுயிரை துச்சமென கருதி போராடி, வஞ்சத்தால்வீழ்த்தப்பட்ட மாவீரர் கட்டபொம்மனின் நினைவு நாளில், அவரது வீரம், தியாகத்தை போற்றுவோம்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: பாரதத்தின் அடிமைத்தளையை தகர்த்தெறிய பாடுபட்டு,வீரமரணம் அடைந்த கட்டபொம்மனின் நினைவுநாளில், அவருக்கு எனது வீர வணக்கம்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: சுதந்திர போராட்டம் தொடங்கும் முன்பாகவே தாய்மண்ணை காக்க ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து இறுதிமூச்சு வரைபோராடிய மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளில்,அவரது வீரத்தையும், துணிச்சலையும் போற்றி வணங்கிடுவோம்.