இன்று கவியரசு கண்ணதாசனின் நினைவு தினம். அவருடைய மகள் ரேவதி சண்முகம் உடன் பேசினோம்.
”அப்பாவோட நினைவு நாள்ல நீங்கள்லாம் இப்படி போன் செஞ்சு பேசுறது ஆறுதலா இருக்கு. அப்பா மட்டும் இப்போ உயிரோட இருந்திருந்தா 98 வயசு ஆகியிருக்கும். 2026-ல அப்பாவுக்கு 100 வயசு” என்றவர், அப்பா கண்ணதாசனின் இறுதி நொடிகள், அப்பாவைப்பற்றிய அம்மாவின் பெருமைகள் என்று சில மறக்க முடியாத விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
”அம்மாவுக்கு அப்பா மேல ரொம்ப பிரியம். எந்தளவுக்குன்னா, அவரோட ஒவ்வொரு அசைவுகளையும் ரசிப்பாங்க. ‘உங்கப்பாவோட நிறத்தை யாருமே கொண்டு வரலை. அவர் எப்படி மினுமினுன்னு இருக்கார் பாருங்க. உங்கப்பா எவ்ளோ உயரம், எவ்ளோ கம்பீரம்’னு சொல்லி சொல்லி பெருமைப்படுவாங்க.
அம்மா, அப்பாவை எப்படிக் கூப்பிடுவாங்க தெரியுமா..? ‘அம்மா’ன்னு கூப்பிடுவாங்க. அப்பாவோ, எங்கம்மாவை ‘அப்பா’ன்னு கூப்பிடுவார். அவங்க ரெண்டு பேரோட பேச்சே இப்படித்தான் இருக்கும். அப்பா நல்ல உயரம். அம்மா, நார்மலைவிட குள்ளம். ஆனா, அப்பாவுக்கு அம்மாதான் தலையில எண்ணெய் வெச்சு விடுவாங்க. நாங்க எல்லாம் அமிதாப் பச்சன் – ஜெயபாதுரின்னு கிண்டல் பண்ணுவோம்.
சில பாடல்களைக் கேட்டவுடனே, ‘இந்த மாதிரி பாட்டெல்லாம் உங்கப்பாவாலதான் எழுத முடியும்’னு சொல்வாங்க. சில பாடல்களைக் கேட்கிறப்போ, ‘இந்தப் பாட்டை எழுதின கவிஞருக்கு இதை எழுத எத்தனை நாள் தேவைப்பட்டுச்சோ. ஆனா, உங்கப்பா பத்தே நிமிஷத்துல எழுதிக்கொடுத்திருவார்’னு சொல்வாங்க. ‘உன் புருஷன்னு பெருமைப் பேசிறியா’ன்னு நாங்க எல்லாம் அம்மாவை கலாட்டா செய்வோம்.
அப்பா இறந்த பிறகு அம்மா 9 வருஷம் இருந்தாங்க. ஆனா, அடிக்கடி தனியா உட்கார்ந்து அழுதிட்டு இருப்பாங்க. கடைசி வரைக்கும் அப்பா இறந்த ஏக்கத்துலயேதான் அம்மா இறந்தாங்க.
அப்பாவுக்கு உடம்பு முடியாம போனப்போ, அமெரிக்காவுல இருக்கிற ஹாஸ்பிடல்ல ஆகஸ்ட் மாதம்,1981-ல அட்மிட் பண்ணாங்க. அங்கே டாக்டர் ஆறுமுகம்னு அப்பாவோட நண்பர் இருந்தார். அவர்தான் அப்பாவை பார்த்துக்கிட்டார். செப்டம்பர் மாசம் எம்.ஜி.ஆர். சார், ‘அமெரிக்க போயிட்டு வாங்கம்மா’ன்னு அம்மாவை அனுப்பி வெச்சார். அம்மா தனியாதான் அமெரிக்கா போனாங்க. இத்தனைக்கும் அம்மாவுக்கு அவ்ளோ நல்லா இங்கிலீஷ் தெரியாது. ‘எங்கயாவது வழி மாறிப் போயிட்டீன்னா இத காட்டும்மா’ன்னு, நாங்கதான் அம்மா கையில அப்பா அட்மிட் ஆகியிருந்த அமெரிக்க ஹாஸ்பிட்டல் அட்ரஸ் எழுதிக்கொடுத்து அனுப்பி வெச்சோம். ஆனா, அதுக்கெல்லாம் அவசியமே ஏற்படாதபடிக்கு அம்மா தைரியமா அமெரிக்கா போய் சேர்ந்துட்டாங்க.
அம்மா, அங்க டாக்டர் ஆறுமுகம் வீட்ல தங்கியிருந்தாங்க. காலையில அப்பாவை பார்க்க ஹாஸ்பிட்டலுக்குப் போனா சாயந்திரம் அவங்க வீட்டுக்குப் போயிடுவாங்க. ஆனா, அம்மா இல்லாத நேரத்துல அப்பா அவங்களைத் தேடுறாருன்னு தெரிஞ்சதும் ஹாஸ்பிடல்லயே தங்கிட்டாங்க அம்மா. ‘அப்பா இன்னிக்கு கண்ணு முழிச்சுப் பார்த்தாரு, இன்னிக்கு சாப்பாட்டாரு, இன்னிக்கு பேசினாரு’ன்னு அப்பா பத்தின அப்டேட்களை எங்களுக்கு லெட்டர் வழியா சொல்லிட்டே இருந்தாங்க. அம்மா அமெரிக்காவுல இருந்து அனுப்புற லெட்டர் எங்க கைக்கு கிடைக்க ஒரு வாரமாகிடும். அப்பாவை வீல் சேர்ல வெச்சாவது அம்மா இந்தியாவுக்குக் கூட்டிட்டு வந்திடுவாங்கன்னு ரொம்ப நம்பியிருந்தோம். ஆனா…” என்றவரின் குரலில் இன்னமும் அப்பா குறித்த துக்கம் இருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…