நாகர்கோவில்; குமரி மாவட்டத்தில் மலையோரங்களில் மழை நீடித்து வருவதையடுத்து திற்பரப்பு அருவியில் இன்று 3-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் பேச்சிப்பாறை அணை அபாய அளவை எட்டியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, புத்தன் அணை பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று 43.29 அடியாக இருந்தது. அணைக்கு 373 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வந்தது. அணையில் இருந்து 547 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. உபரியாக 240 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது.
இதையடுத்து சுற்றுலா பயணிகள் நலன் கருதி திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் அங்கு குளிக்க தடை விதித்தது. இந்த தடையானது இன்று 3-வது நாளாகவும் நீடித்தது. இதற்கான அறிவிப்பு அங்கு வைக்கப்பட்டு அருவி நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் கரையில் நின்றவாறு அருவியின் அழகை பார்த்துச் செல்கின்றனர்.
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்கிறது. கனமழை பெய்தால் வெள்ள அபாய நிலையை எதிர்கொள்ள தயார் நிலையில் வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை, பொதுப்பணித் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று 64.24 அடியாக இருந்தது. அணைக்கு 193 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. 160 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. சிற்றாறு ஒன்றில் 14.43 அடி தண்ணீர் உள்ள நிலையில் அணைக்கு 18 கனஅடி தண்ணீர் வருகிறது.