சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வெள்ளை அறிக்கை கோரியிருந்தார். “தற்போது சென்னையில் மழைநீர் தேங்காமல் உள்ளதே, அதுதான் வெள்ளை அறிக்கை” என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் கடந்த அக்.14-ம் தேதி இரவு முதல் கனமழை கொட்டித் தீர்த்தது. அன்று நள்ளிரவு முதலே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையின் பல்வேறுஇடங்களுக்குச் சென்று ஆய்வுமேற்கொண்டார். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினமும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று ஆய்வு செய்து, மழைநீர் தேங்காமல் தடுக்கும் பணிகளை துரிதப்படுத்தினார்.
இந்நிலையில் நேற்று மழை ஓய்ந்தநிலையில், சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி வெங்கட்ரங்கம் பிள்ளை தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனையும் உணவுக் கூடத்தையும் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அங்கு வந்திருந்த மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
முன்னதாக கடந்த 2 நாட்களாக மழைக் காலத்தில் சிறப்பாகபணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் பணியாளர்கள் என மொத்தம் 600 முன்களப் பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதன்படி சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் போர்வை, பிரட், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரணை பொருட்களையும், ரூ.1,000 ஊக்கத் தொகையையும் அவர்களுக்கு உதயநிதி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் கடந்த 14-ம் தேதி இரவும், அதைத்தொடர்ந்து 15-ம் தேதி பகலிலும் அதிக கனமழை பெய்தது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலினின் ஆலோசனைக்கு இணங்க அனைத்து அதிகாரிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், எம்.பி.க்கள், கவுன்சிலர்கள் என அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றினார்கள். தற்போது மழை குறைந்துள்ளது. மீண்டும் கனமழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்நிலையில் உள்ளது.
மழையின்போது நிவாரண பணிகளில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள், மெட்ரோ பணியாளர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் எனதுநன்றி. எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மழைநீர் வடிகால் பணிகள்குறித்து வெள்ளை அறிக்கை கோரியிருக்கிறார். சென்னையில் தற்போது மழை நீர் எங்கும் நிற்காமல்உள்ளதே, அதுதான் வெள்ளை அறிக்கை. இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வுகளில் தயாநிதிமாறன் எம்.பி., மாநகராட்சி நிலைக் குழு தலைவர் சிற்றரசு, மண்டல குழுத் தலைவர் எஸ்.மதன்மோகன், மண்டல கண்காணிப்பு அலுவலர் மு.பிரதாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருநின்றவூர்: திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில் உள்ள ஈசா ஏரிக்கு,திருநின்றவூர் நகராட்சி பகுதியில்இருந்து வெளியேறும் மழைநீர் எளிதாக செல்லும் வகையில்,சமீபத்தில் நீர்வளத் துறை சார்பில் நீர் வழிப்பாதைகள் சீரமைக்கப்பட்டன; ஏரியின் கரைகள் பலப்படுத்தப்பட்டன. அதனை நேற்று உதயநிதி பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.