டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த இந்தியா

பெங்களூரு,

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி நடந்து வருகிறது. மழை காரணமான முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்ட நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார் அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணியின் அபார பந்துவீச்சால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று விளையாடுவதில் தடுமாறினர்.

குறிப்பாக, விராட் கோலி, சர்ப்ராஸ் கான், கே.எல்.ராகுல், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறினர். இறுதியில் இந்திய அணி 31.2 ஓவர்களில் வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் சிறப்பாக பந்துவீசி மேத் ஹென்றி 5 விக்கெட், வில்லியம் ஓரூர்க் 4 விக்கெட் , சவுதி ஒரு விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து நியூசிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி வருகிறது.

குறைந்த ரன்னில் ஆல் அவுட் ஆனதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி மோசமாக சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது, ஆசிய மைதானங்களில் முதலில் பேட்டிங் செய்த அணி, 50 ரன்களுக்குள் ஆட்டமிழப்பது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். அத்துடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் 3வது குறைந்தபட்ச ஸ்கோராக இது பதிவாகியுள்ளது.

அதேபோல, ஒரு இன்னிங்சில் இந்திய அணி வீரர்கள் 5 பேர் டக் அவுட் ஆவது இது 4-வது முறையாகும். நியூசிலாந்துக்கு எதிராக 2-வது முறையாக தற்போது 5 பேர் டக் அவுட் ஆகி உள்ளனர். இதற்கு முன்பு இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக 6 பேர் டக் அவுட் ஆகி இருந்தனர்.

பொதுவாக, சொந்த மண்ணில் மிகவும் வலிமை வாய்ந்த அணியாக இந்திய அணி திகழ்ந்து வருகிறது. இந்த சூழலில், நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி வெறும் 46 ரன்னில் ஆல் அவுட் ஆன சம்பவம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதில் இருந்து இந்திய அணி எப்படி மீண்டு வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.