பியூனஸ் அயர்ஸ்: விடுதியின் மூன்றாவது மாடி பால்கனியில் இருந்து கீழே விழுந்து பாப் இசை பாடகர் லியாம் பெய்ன் உயிரிழந்தார். அவருக்கு வயது 31.
ஒன் டைரக்ஷன் (1டி) என்ற பாப் இசைக் குழுவின் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த லியாம் பெய்ன் பிரபலமானார். கடந்த 2008 முதல் அவர் இசைத்துறையில் இயங்கி வருகிறார். பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றில் ஒளிபரப்பான ‘தி எக்ஸ் ஃபேக்டர்’ மூலமாக வாய்ப்பு பெற்றவர். பின்னர் தனியாக பாடல்களை வெளியிட்டார். ஆர்&பி ஜானரிலும் அவர் தேர்ந்தவர்.
தனது தோழியுடன் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி முதல் அர்ஜெண்டினாவில் அவர் விடுமுறையை செலவிட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 14-ம் தேதி அவரது தோழி அர்ஜெண்டினாவில் இருந்து சென்றுள்ளார். பின்னர் வேறொரு விடுதியில் லியாம் பெய்ன் அறை எடுத்து தங்கியுள்ளார். அங்கு 1டி குழு நண்பரின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தார். இந்த சூழலில் நேற்று புதன்கிழமை (அக்.16) மாலை விடுதியின் லாபியில் ஆண் ஒருவர் ஆக்ரோஷத்துடன் நடந்து கொள்வதாக அவசர உதவி எண்ணுக்கு புகார் சென்றுள்ளது. அது லியாம் தான் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சொல்லியதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்த தனது அறையின் பால்கனியில் இருந்து கீழே விழுந்து அவர் உயிரிழந்துள்ளார். இது தற்கொலையா அல்லது போதையில் தவறி விழுந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு போதை பழக்கம் இருப்பதாக கடந்த ஆண்டு தெரிவித்தார். அதை தவிர்க்க பயிற்சி மேற்கொண்டது குறித்தும் அவர் சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.