சண்டிகர்: மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர்கள் கவுன்சில் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் தொடங்கியது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்கள் மாநாடு சண்டிகரில் தொடங்கியது. ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு இந்த மாநாடு தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த மாநாட்டில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெ.பி நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, இரண்டு துணை முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு, பிஹார் துணை முதல்வர்கள் சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா, சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், மேகாலயா முதல்வர் கோனார்ட், மணிப்பூர் முதல்வர் பைரோன் சிங், ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங், திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா என 13 முதல்வர்கள் மற்றும் 16 துணை முதல்வர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கடந்த பல ஆண்டுகளில் இதுபோன்ற என்டிஏ முதல்வர்களின் மாநாடு நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் சட்டப்பேரவைகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த மாநாடு தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள பாஜக, “இந்த மாநாட்டில் தேசிய வளர்ச்சி சார்ந்த சவால்களை உள்ளடக்கிய நிகழ்ச்சி நிரல் இருக்கும். அரசியல் சாசனத்தின் அமிர்த மகோத்சவம், ஜனநாயகத்தை கொலை செய்யும் முயற்சியின் (அவசர நிலை பிறப்பிப்பு) 50-வது ஆண்டு போன்ற விஷயங்களும் விவாதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.